ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடும் கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு ஆணைக்குழு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.
குறித்த சட்டமூலம் கடந்த 6ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன், தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கு உரிய சட்ட ஏற்பாடுகள் அவசியமானவை என்பதை ஏற்றுக்கொண்டுள்ள ஆணைக்குழு, அவை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளையும் சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளையும் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
எனினும், தற்போதைய சட்டமூலத்தில் உள்ள சில ஏற்பாடுகள் அடிப்படை உரிமைகளுக்கும் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கும் முரணாக அமையக்கூடும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடவும் இந்தப் புதிய சட்டமூலம் கடுமையானதாகவும் ஒடுக்குமுறைத் தன்மை கொண்டதாகவும் அமையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் கொண்டுள்ள தொடர்புகள் மட்டுமன்றி, அவர்களுடன் தொடர்புபடுத்தப்படக்கூடிய ஆடை அணியும் முறை, கைச் சைகைகள், மொழிப் பயன்பாடு மற்றும் பச்சை குத்தல்கள் போன்ற அம்சங்களும் சட்டத்தின் வரம்புக்குள் கொண்டுவரப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஆணைக்குழு கவலை தெரிவித்துள்ளது.
அதேவேளை, சந்தேகநபர்களை விடுவித்தல், பிணையில் அனுமதித்தல் அல்லது விளக்கமறியலில் வைப்பது தொடர்பாக நீதிமன்றங்களுக்கு உள்ள வழமையான அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படுவது குறித்தும் ஆணைக்குழு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
எனவே, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்படும் சட்டம், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்காத வகையில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய வலியுறுத்தலாக உள்ளது.








