மாத்தறை, தலல்ல மற்றும் நாவோட்டுன்ன கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் இன்று (24) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, 475 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்துக்குக் கிடைத்த நம்பகமான தகவலுக்கு அமைய, கடற்படையினரும் தொடர்புடைய அதிகாரிகளும் இணைந்து இந்த விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, நாவோட்டுன்ன கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் 10 சாக்குப் பைகள், 11 பயணப் பைகள் மற்றும் ஒரு டிங்கி படகு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
பின்னர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், கைப்பற்றப்பட்ட பொதிகளில் 200 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும், 275 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







