தனது சிறைவாசத்தின் 50ஆவது நாளை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், மக்களின் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்குத் தனது சிறைவாசம் பயன்படுத்தப்படக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு உண்மையான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்குமானால், 50 நாட்கள் மட்டுமன்றி 500 நாட்கள்கூடச் சிறையில் இருக்கத் தயாராக இருப்பதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை மூன்றில் இரண்டு பங்காகக் குறைத்தல், இறக்குமதி விலையில் எரிபொருளை வழங்குதல், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்குதல், பிணையும் வட்டியும் இன்றி வங்கிக் கடன்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், டொயோட்டா விட்ஸ் (Toyota Vitz) கார்களை சுமார் 12 இலட்சம் ரூபாய்க்குப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்தல், அரிசி விலையைக் குறைத்தல் மற்றும் சுகாதாரம், கல்வி, அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகளை முழுமையாக நீக்குதல் போன்ற நடவடிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.
இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமானால், தனது சிறைவாசத்தைப் பயனுள்ள தியாகமாகக் கருதுவதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு உரிய நிவாரணங்கள் கிடைக்காத நிலையில், திறைசேரி நிரம்பி வழிவதாகக் கூறப்படும் சூழலில் தாம் வாழ்வதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு குடும்பத்தைக் குறிவைப்பதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளை மறைத்துவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
தனது வழக்கில் நீதிமன்றம் இறுதியில் தன்னை நிரபராதி என விடுவிக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள அவர், சிறைவாசம் தனது அரசியல் எண்ணங்களை முடக்கிவிடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்த நாமல், உண்மையான வெற்றி என்பது அதிகாரத்தில் அல்ல, மக்களின் இதயங்களில் இடம்பிடிப்பதிலேயே தங்கியுள்ளது என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார்.
அத்துடன், நாட்டின் கலாசார மற்றும் இயற்கை பாரம்பரியங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், ‘காவன்திஸ்ஸ’ யானை தொடர்பான சர்ச்சை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் பாரம்பரியங்களைப் பாதுகாப்பது நாட்டின் முதல் குடிமகனுக்கும் பொறுப்பான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“என்னைச் சிறையில் அடைக்க முடிந்தாலும், எம்முடன் நிற்கும் மக்களின் எதிர்பார்ப்புகளைச் சிறைபிடிக்க முடியாது” எனக் குறிப்பிட்டு நாமல் ராஜபக்ஷ தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.








