பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை (30) ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகக் கட்டமைப்புகளிலும் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை, ஊழியர்கள் மீதான அதிகரித்த பணிச்சுமை மற்றும் போதிய பௌதிக வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கு இணையாக, நாளை பேரணியொன்றையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதுடன், தமது கோரிக்கைகளை உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவருவதுமே இந்தப் போராட்டத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.








