மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில், சந்திவெளியைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளரான வடிவேல் சோமசுந்தரம் என்பவர், நேற்று (28) காலை தனது கால்நடைகள் அடைக்கப்பட்டிருந்த பட்டியில் வைத்து தாக்கப்பட்டுக் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினரால் அவர் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், பின்னர் கரடியனாறு பொலிஸாரால் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் மாலை சுமார் 5.30 மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவியும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் கால்நடைகள் மீதான துப்பாக்கிச் சூடு மற்றும் கால்நடைப் பண்ணையாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சம்பந்தப்பட்ட அனைத்து முறைப்பாடுகளும் பக்கச்சார்பற்ற முறையில் விசாரிக்கப்பட வேண்டும்.
கால்நடைப் பண்ணையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்தல், கால்நடைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு நீதி பெற்றுக்கொடுத்தல் மற்றும் மேய்ச்சல் தரை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை அவசியமானவை என கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச. சிவயோகநாதன் வலியுறுத்தியுள்ளார்.
வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.








