பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கல்விசார் ஆய்வுகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்துக்கொள்ளல் மற்றும் வருமானம் ஈட்டும் போது அறவிடப்படும் வரியிலிருந்து விடுவித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதெனவும், பொருளாதார பிரச்சினைகளை விரைவில் தீர்த்து அனைத்து மக்களுக்கும் நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் தெரிவித்தார்.
மேற்படி கல்வி ஆய்வுகளுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தற்போதுள்ள சுற்று நிருபங்கள் ஊடாக போதிய ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை என்றும், தற்போதுள்ள வரி விதிப்புக்களிலிருந்து விடுப்பதற்கான சுற்று நிருபமொன்றை வெளியிடுவதற்கான இயலுமை தொடர்பில் தேடியறிந்து 03 வாரங்களுக்கு தனக்கு அறிக்கையொன்றை சமர்பிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினை இரத்துச் செய்து பல்கலைக்கழக நிருவாகச் செயற்பாடுகளை கலினோனியா மற்றும் பீஜிங் பல்கலைக்கழக முறைமைகளுக்கமைய தயாரிப்பதற்கான இயலுமை தொடர்பிலான ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.