ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று மூன்று வருடங்களை கடந்துவிட்டது. 2019 ஏப்ரல் 21ஆம் திகதி மேற்படி தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதல் இடம்பெற்று சில தினங்களின் பின்னர் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜ.எஸ்.ஜ.எஸ், தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்தது. இவ்வாறானதொருதாக்குதல் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் உண்டென்னும் முன்னெச்சரிக்கையை இந்திய உளவுத்துறை வழங்கியதாக அப்போது செய்திகள் வெளியாயிருந்தன.
அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் முன் கூட்டிய தகவல்கள் இருந்தன – ஆனால் சிறிலங்கா அதிகாரிகள் உரியநடவடிக்கைகளை எடுப்பதில் பின்னடைந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார். 280இற்கு மேற்பட்டவர்களின் கொலைக்கு காரணமான குறித்த தாக்குதல் தொடர்பில் பல்வேறுசர்ச்சைக்குரிய கருத்துக்கள் இப்போதும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு தொடர்பிருப்பதாக நீதிவான் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்த ஆண்டு இந்த விசாரணையை முன்னெடுத்த இலங்கை உச்ச நீதி மன்றம் மைத்திரிபால சிறிசேன பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டது. மைத்திரிபால சிறிசேனவின் மீதான பிரதான குற்றச்சாட்டு பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பானவரென்னும் வகையில் உரிய நவடிக்கை எடுக்கத் தவறியிருக்கின்றார் என்பதுடன் முன்கூட்டிய தகவல்கள் இருந்தும் அதனை மறைத்து தன்னிச்சையாக செயல்பட்டிருக்கின்றார் என்பது மட்டுமே. ஆனால் ஏன் அவ்வாறு செயல்பட்டார் – என்பதற்கான பதில்கள் கண்டறியப் படவில்லை. இந்த நிலையில் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நாட்டில் இடம்பெற அனுமதிக்கப் போவதில்லையென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெறுவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கே இதுவரையில் முறையான விசாரணைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் தோல்விடைந்திருக்கின்றது. இந்த விசாரணையை முன்னெடுப்பது இலகுவான விடயம் ஏனெனில் யுத்தத்ததை வழிநடத்தியவர்கள் உத்தரவிட்டவார்கள் அனைவருமே கொழும்பில்தான் இருக்கின்றர் ஆதாரங்களை திரட்டுவது மற்றும் சந்தேகநபர்களை விசாரணை செய்வது மிகவும் இலகுவானது. அனைத்தையும் அரசாங்கம் தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உள்ளடக்கி விடயங்களை முன்னெடுக்க முடியும். ஆனால் இன்றுவரையில் குறித்த விசாரணையில் சிறிதளவு முன்னேற்றம் கூட இடம்பெறவில்லை.
இந்த பின்புலத்தில் நோக்கினால் ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும். ஈஸ்டர் தாக்குதலில் சம்மந்தப் பட்டிருப்பவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் அணுக முடியாத தூரத்தில் இருக்கும் ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பு. அமெரிக்காவிற்கே மிகவும் சவாலான அமைப்பு. இந்த நிலையில் இந்தத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை விசாரணைக்குள்ளாக்குவது என்பது முடியாத காரியம். ஆனால் இவ்வாறானதொரு தாக்குதல் தொடர்பில் முன் கூட்டிய தகவல்கள்
இருந்தும் ஏன் இதனை அப்போதைய நிர்வாகம் கண்டும் காணாமல் விட்டிருந்தது. அது உண்மையா? அவ்வாறாயின் கண்டும் காணாமல் விட்டதால் நன்மையடைந்தவர்கள் யார்? எவ்வாறான நன்மைகள்? இந்தக் கோணத்தில் விடயங்களை ஆராய்ந்தால் சில புதிர்களை அவிழ்க்க முடியும். ஆனால் அவ் வாறான முயற்சிகளும் இன்றுவரையில் சரியாக இடம்பெற்றதாகவும் தெரியவில்லை.
மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக தனது சொந்த புத்திலியிருந்து விடயங்களை அணுகியிருப்பாரா என்பது சந்தேகமே! ஆனால் ஒரு விடயம் உண்மை. ஈஸ்டர் தாக்குதல் ரணில் – மைத்திரி அரசாங்கத்தை முக்கியமாக ரணில் விக்கிரமசிங்கவை பின்னுக்கு தள்ளியது, கோட்டாபய ராஜபக்ஷவின் செல்வாக்கை இரட்டிப்பாக்கியது. அவரது வெற்றியை மிகவும் இலகுவாக்கியது. எண்ணிக்கையில் சிறுபான்மையினரின் ஆதரவில்லாமல் வெற்றிபெறுவதற்கான சூழலை உருவாக்கியது. ஈஸ்டர் தாக்குதலால் நன்மையடைந்த
நபரென்றால் – அது கோட்டாபய ராஜபக்ஷ மட்டும்தான் – வேண்டுமானால் மகிந்த குடும்பத்தையும் சொல்லலாம். அதேபோன்று ராஜபக்ஷ குடும்பத்தை இலக்கு வைத்து செயற்பட்ட ‘அரகலய’ கிளர்ச்சியால் நன்மையடைந்த ஒருவரென்றால் அது ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான். ஈஸ்டர் தாக்குதலால் ஆட்சியை இலகுவாக கைப்பற்றிய கோட்டாபய, அரகலயவினால் விரைவாக கதிரையை இழந்துபோனார்.