இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கில் இன்றுவரை நீடிக்கும் ஓர் பாரிய பிரச்சனையாக நில அபகரிப்பு காணப்படுகிறது. தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களிலிருந்து அகற்றப்படுவதும் விரட்டப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற விடயமாக மாறி விட்டது. ஒவ்வொரு நாளும் வடகிழக்கில் ஏதோ ஒரு இடத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றது.
அந்தவகையில் பௌத்த விகாரைகளை நிறுவி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தல், வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் மரபுரிமையை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு நிலத்தை ஆக்கிரமித்தல், மகாவலித் திட்டம், மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையின் கீழ் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
நிலமை இவ்வாறு இருக்க இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னுமொரு விதமான காணி பிரச்சனை பூதாகரமாக வடிவெடுத்து நிற்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு இராஜாங்க அமைச்சர் தனது செல்வாக்கினையும் அரசியல் அதிகாரத்தினையும் பயன்படுத்தி 100 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட அரசகாணிகளை தனது சொந்த தேவைக்காகவும் தனது உறவினர், ஆதரவாளர்களுக்கும் பங்கிட்டு கொடுத்து வருகின்றார். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வந்தும் எந்த வித தீர்வும் எட்டப்படாமல் அது தொடர்ந்த வண்ணமே உள்ளது. இக்கட்டுரையின் நோக்கம் இந்த பிரச்சனைகளை சற்று அலசி ஆராய்வதேயாகும்.
குறிப்பிட்ட அமைச்சர் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதற்கு பின்னணியில் இருந்து செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் இவர்மேல் உள்ளது. குறிப்பாக மட்டக்களப்பின் எல்லைக்கிராமங்களான மயிலத்தமடு,மாதவனை பிரதேசங்களில் நிறுவப்பட்டுவரும் சிங்கள குறியேற்றங்களை கூறலாம். இப்பிரதேசங்களில் சிறிய குட்டைகள் ,குளங்கள் காணப்படுவதனால், இது 100 வருடங்களுக்கு மேலாக அந்த பிரதேசத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களால் மாடுகளின் மேய்ச்சல் தரையாகவும், சிறு பயிர்செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் இந்த மயிலத்தமடு சிங்களமயமாக்கல் பிரச்சனை என்பது இன்று அல்ல கடந்த 13 வருடங்களுக்கு முன்னதாகவே ஆரம்பமாகிவிட்டது என்றே கூறலாம். உதாரணமாக 2010 ஆம் ஆண்டு அம்பாறை, பொலநறுவை , தெஹியத்தகண்டியைச் சேர்ந்த 250 குடும்பங்கள் இப்பகுதியில் குடியேற முற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப் பிரச்சனை சூடுபிடிக்கும் முன்னதாகவே நீதிமன்றம் சென்றதனால் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவையும் மீறி சிலர் அங்கிருந்து வெளியேறாமலே இருந்துள்ளனர். ஆனால் சிறிது காலம் கழித்து அவர்கள் முற்றாக வெளியேறியதாக அந்நேரம் அங்கிருந்த பண்ணைத்தொழிலாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இப்பிரச்சனை அத்தோடு நிற்கவில்லை மீண்டும் 2015 ஆம் ஆண்டு ஒரு சிறிய அளவிலான சிங்கள மக்களின் குடியேற்றங்கள் மீளவும் உருவாகின. ஆனால் அவர்களை மகாவலி அதிகார சபையினர் வெளியேற்றிருந்தமையும் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறத்தில் அங்கு வசித்து வந்த தமிழ் மக்கள் மீதும் கால்நடைகள் மீதும் இனம் தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் அது குறித்து கரடியனாறு பொலிஸில் முறையிட்டும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்று இன்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சில வருடங்களுக்கு முன்பு பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு கட்டிடத்தின் பின்னதாக அமைந்துள்ள 14ம் மாடியில் அமைச்சர் சமல் ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் ஒரு கூட்டம் இடம்பெற்றிருந்தது. அதில் வடக்கில் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபகாலமாக பேசும்பொருளாகிய மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களது பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடினர். இக்கூட்டத்தில் இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் , சதாசிவம் வியாழேந்திரன் என்போர் கலந்து கொண்டிருந்ததுடன் அதில் அம்பாறை தெஹியத்தகண்டியைச் சேர்ந்த சோளன் பயிர் செய்கைக்கு பொறுப்பான விவசாய சங்கத்தின் தலைவரான லியனகே அவர்கள் தாங்கள் நெடுங்காலமாக இவ்விடத்தில் வாழ்ந்து வருவதாகவும் அதற்கான பிறப்பு சான்றிதழ்கள், வாழ்விடப் பதிவு என்பன உள்ளது எனக்கூறி சில ஆதாரங்களைக் காட்டினார். இருப்பினும் 2011 ஆண்டு வரையப்பட்ட நில அளவை படத்தினை மேற்கோள் காட்டி, லியனகே கூறிய விடயம் பொய் என நிரூபிக்கப்பட்டது.
மீண்டும் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும்பான்மையின மக்கள் கால் நடைகளை மேய்ப்பதற்காகவும் சோளம் பயிர்செய்கை செய்வதற்காகவும் எனக் கூறிக்கொண்டு காடுகளை அழித்து இப்பிரதேசத்தில் குடியேறியிருந்தனர். ஆனால் இந்த முறை பிரச்சனை மிகவும் தீவிரமாக இருந்ததால் இது குறித்து இப்பிரதேச மக்கள் மட்டக்களப்பு அரசாங்க அதிபரிடம் முறையிட்டதனை தொடர்ந்து, மட்டக்களப்பு அரசாங்க அதிபர், சிங்கள குடியேற்ற மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார். எதற்காக இங்கு வந்துள்ளீர்கள் என்று வினாவிய போது சோளம் பயிச்செய்ய இந்த இடம் பொருத்தமான இடம் எனவும் பயிர்செய்கை முடிந்தவுடன் நாங்கள் சென்று விடுவோம் என்றும் அம் மக்கள் தெரிவித்திருந்தனர். உங்களுக்கு குடியேற்றத்திற்கான அனுமதியினை வழங்கியது யார் என கேட்டபோது சமல் ராஜபக்ஸ, அமைச்சர்களே எமக்கு அனுமதியளித்தனர் என கூறினர். அத்தோடு இது குறித்த விசாரணைகளின் பின்னணியில் முக்கிய தரப்பினராக தெஹியத்தகண்டி பிரதேச சபை உறுப்பினர் உள்ளமை தெரியவந்திருந்தது.
இது குறித்து மக்கள் தெரிவிக்கையில் 2020 ஆம் ஆண்டு பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விடுதலை ஆகி தனது அரசியற் செயற்பாடுகளை செய்ய ஆரம்பித்த பின்னர் இவ்வாறான சிறிது சிறிதாக குடியேற்றங்கள் அதிகரிக்க ஆரம்பித்தாக விசனம் தெரிவிவிக்கப்படுகிறது. இது அங்குள்ள பண்ணையாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தங்களை பிள்ளையான் வந்து சந்தித்தது தங்களுடைய மேய்ச்சல் தரைக் காணியை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்கா என்ற சந்தேகம் பண்ணையாளர்களுக்கு மத்தியில் உருவானது. மேலும் பிள்ளையானின் மாதவனை வருகையின் பின் அதிகரிக்கும் இந்த பெரும்பான்மை இனத்தவரின் காணி அபகரிப்புக்கு பிள்ளையான் என்ன பதில் கூறப்போகிறார் என பண்ணையாளர்கள் கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். கிழக்கை மீட்கப் போகிறோம் என்று கூறியவர்களே, இன்று கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்களின் காணிகளை மாற்று இனத்தவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர்கள் மேலும் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறு பல பிரச்சனைகள் காணப்பட்டாலும் 2021, 2022 ஆம் ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் இதுகுறித்து பல நீதிமன்ற வழக்குகள் இடம்பெற்றிருந்தன. 2023 ஆம் ஆண்டு மாசி மாதம் அளவில் மாதவனை,மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்தால், பண்ணையாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக மட்டக்களப்பில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது. நடமாடும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடும் வெட்டுக்காயங்களும் ஏற்பட்டு, இறந்தும் காணப்பட்ட நிலையில் பண்ணையாளர்கள் தங்களுக்கும் ஏதும் உயிர் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இம் முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தனர். இம்மக்கள் மேலும் தெரிவிக்கையில் அத்துமீறி குடியேறி இருக்கும் பெரும்பான்மை இனமக்கள் சட்டவிரோத துப்பாக்கிகள் வைத்திருப்பதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் ,பிள்ளையான் தலைமையில் குறித்த குடியேற்றமானது திட்டமிட்டு திணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காணி சுவீகரிப்பின் உச்சக்கட்டம்
இது ஒரு புறமிருக்க மட்டக்களப்பிலுள்ள தளவாய், சவுக்கடி பகுதியில் அடாத்தாக பிடிக்கப்பட்ட காணிகளுக்கு தங்களது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி முறையற்ற விதத்தில் உறுதி முடிக்கப்பட்டுள்ளன. அவற்றை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உபதலைவர் கந்தையா யோகவேல் உள்ளிட்ட கட்சியின் சில உறுப்பினர்கள், தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர், அவரது குடும்ப உறுப்பினர்கள் என பலருக்கு பல ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்த தகவலை மீள்குடியேற்ற அமைச்சின் முன்னாள் செயலாளராகிய பொ.ரவீந்திரன் மட்டக்களப்பு காணி விவகாரம் தொடர்பில் நடைபெற்ற ஊடக நேர்காணலில் கூறியுள்ளார். மேலும் கடந்த நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்திரகாந்தனின் செயலாளராக இருந்த அசாத் மௌலானா என்பவர் ஒரு காணி பிரச்சினையிலே தன்னை தொடர்புபடுத்தி, ”நீங்கள் பிள்ளையான் அண்ணனுடன் மோதுகின்றீர்கள். உங்களை எப்போதோ ஒரு நாள் பழி வாங்கியே தீருவோம்”. என தன்னை மிரட்டியதாகவும் மேற்குறித்த நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார். அந்த பழிவாங்கல் தான் இப்போது நடைபெறுகிறதா? என்று தன்னை சிந்திக்க தூண்டுகிறது எனவும் சந்திரகாந்தனின் ஆதரவாளர்கள் குறிப்பாக காணி விவகாரம் தொடர்பில் தன்னை மிரட்டியதாகவும் சுட்டியிருந்தார்.
அடுத்ததாக, புலுட்டு மானோடை, மாவடியோடை பிரதேசங்களில் சிவநேசதுரை சந்திரகாந்தன் 370 ஏக்கர் காணியை அபகரித்து அவருக்குமட்டுமல்லாம் அவரின் உற்றார் உறவினர்கள், ஆதரவாளர்களுக்கும் கூட பங்கிட்டார் என அக் கிராமமக்கள் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர். இது தொடர்பான பெயர் விபரங்கள் எமது ஊடகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் சில கீழ்வருமாறு,
கிருஷ்ணவேணி அகிலகுமார் – 837452279V – 3 ஏக்கர்
சிவநேசதுரை அகிலகுமார் – 801361196V – 3 ஏக்கர்
சிவநேசதுரை சந்திரகாந்தன் – 752313903V – 5 ஏக்கர்
சிவநேசதுரை சுரேஷ்குமார் – 732010530V – 5 ஏக்கர்
சந்திரகாந்தி மணிவண்னன் – 787041230V – 3 ஏக்கர்
சிவநேசதுரை சுகுந்தன் – 780820527V – 4 ஏக்கர்
மாணிக்கன் மதியழகன் – 851213503V – 3 ஏக்கர்
செல்லத்தம்பி குணரத்தினம் – 601533537V – 3 ஏக்கர்
ஆறுமுகம் கிருபைராசா – 711924035V – 4 ஏக்கர்
காத்தமுத்து மகேந்திரன் – 672083656V – 3 ஏக்கர்
செல்லத்துரை சாந்தினிதேவி – 758024067V – 6 ஏக்கர்
முத்துலிங்கம் பேரின்பராசா – 702003180V – 2 ஏக்கர்
நல்லையா சிவசக்தி – 848662020V -2 ஏக்கர்
நல்லையா விவேகானந்தன் – 881113414V – 4 ஏக்கர்
பஞ்சாட்சரம் யோகநாதன் – 750831907V -3 ஏக்கர்
பஞ்சாட்சரம் சுதீஸ்வரன் -198034900813 – 4 ஏக்கர்
பஞ்சாட்சரம் விக்னராஜா – 680112975V – 3 ஏக்கர்
பூபால பிள்ளை நவரத்தினம் – 420410395V – 2 ஏக்கர்
தங்கவடிவேல் சசிகலா – 695024479V – 4 ஏக்கர்
சாமிதம்பி ஆறுமுகம் – 471310360V – 2 ஏக்கர்
தம்பிப்பிள்ளை செல்வி – 896561396V – 1 ஏக்கர்
தம்பிப்பிள்ளை தர்ஷன் – 981252870V – 1 ஏக்கர்
கந்தவனம் பாக்கியம் – 527343542V – 1 ஏக்கர்
தம்பிப்பிள்ளை தர்மலிங்கம் – 951614726V – 1 ஏக்கர்
மயில்வாகனம் நகுலாம்பிகை 198167504046 – 1 ஏக்கர்
மயில்வாகனம் கனகாம்பிகை – 747002282V – 1 ஏக்கர்
சின்னத்துரை உமேஸ்வர் – 722993683V – 1 ஏக்கர்
சுப்பிரமணியம் பேச்சிமுத்து – 768284334V – 1 ஏக்கர்
சுப்பிரமணியம் நல்லம்மா – 686203646V – 1 ஏக்கர்
கணபதிப்பிள்ளை ரஜினிகாந்த் – 820811240V – 2 ஏக்கர்
கிருஷ்ணப்பிள்ளை திருமுகம் – 733062347V – 4 ஏக்கர்
பொன்னுத்துரை பிரபாவதி – 806971537V – 4 ஏக்கர்
செல்லை நல்லதம்பி – 493322117V – 3 ஏக்கர்
இன்னும் இந்த பட்டியலின் பெயர்கள் நீண்டு கொண்டே போகிறது. இதனைப்போன்றே வாகரை இராமர் தீவு பிரதேசத்தில் பொதுமக்கள் சேனைப்பயிர் செய்த காணிகளை பிள்ளையான் தனக்கு தெரிந்த நபர்களுக்கு மட்டும் வழங்கி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதே சமயம் இன்னொரு பக்கத்தில் அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையிலும் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகிறன. இதில் முதலாவதாக கதிரவெளியில் இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்கென காணி ஒதுக்கப்பட்டமையை கூறலாம். இத் தொழிற்சாலை அமைப்பதனால் பௌதீக சூழல்களான நிலச்சூழல், வளிச் சூழல் போன்றன பாதிப்படைவதாகவும், கடல் வளம், நிலத்தடி நீர் பாதிப்பிற்குள்ளாகி எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை பாதிப்படையும் என்று மக்கள் தெரிவித்தனர். பால்சேனை வடக்கு தொடக்கம் வெருகல் வரையான கதிரவெளி,புதூர்,புச்சாக்கேணி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக கனிய மணல் அகழ்வு மற்றும் தொழிற்சாலை அமைக்கும் ஆரம்ப வேலைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 2019.01.30 அன்று அப் பிரதேச மக்களால் வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வீதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அப்போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மக்கள் , ” இத் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு பின்னணியில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தான் இருப்பதாகவும் அவரின் நோக்கம் காணி அபகரிப்பு தான்” என்றும் கூறியுள்ளனர்.
அடுத்ததாக இறால் பண்ணை திட்டத்தை கூறலாம். இத் திட்டம் வாகரைப் பிரதேசத்தில் திருமலை வீதி பக்கமாகவுள்ள புச்சாங்கேணி தொடக்கம் கொழும்பு பிரதான வீதியில் உள்ள காரைமுனை வரையிலான சுமார் 3800 ஏக்கர் காணியை உள்ளடக்கியதாக இருந்தது. இந்த இறால் பண்ணையை அமைப்பதற்கான காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் கடத்த 2021 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் தான் இந்த விடயம் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தது. இந்த செயற்பாடுகளும் பிள்ளையானின் ஏற்பாட்டில் தான் முன்னெடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து 2022.04.02 அன்று கையெழுத்து வேட்டை ஒன்றையும் நடத்தியிருந்தனர்.அது மாத்திரமன்றி குறித்த செயற்பாடானது, ஒட்டுமொத்த வாகரை மண்ணையும் குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடுகள் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்ததாக வாகனேரி,சாய்ந்தமடு சோலார் மின்சார உற்பத்தி திட்டத்தை கூறலாம். மட்டக்களப்பு வாழைச்சேனை கமநல திணைக்களத்திற்குட்பட்ட வாகனேரி மதுரங்கேணி சாப்பமடு விவசாயிகளின் காணிகள் சூரிய மின்சக்தி கலங்கள் பொருத்துவதற்காக அவர்களுக்கே தெரியாமல் அளக்கப்படுவதாக குற்றம்சாட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். 1956 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை பயிர் செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இந்தக்காணிகள் எங்கள் பெற்றோர்கள் கொடுத்துச்சென்றது, எமக்கு அந்த வயற்காணியை தவிர்த்து வேறு எந்த காணியோ பணமோ செயற்திட்டங்களோ தேவையில்லை எனவும் குறித்த கிராம மக்கள் வலியுறுத்தி கூறியிருக்கின்றார்கள். இது தொடர்பாக தமிழ் ,முஸ்லீம் மக்களினால் 2023.03.22 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (கச்சேரியில்) ஒரு முக்கிய போராட்டமொன்று முன்னெடுக்கபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் கீழ் இங்கு 110 பேருக்கு சொந்தமான 325 ஏக்கர் வயற்காணிகளில் சோலார் கருவிகளை பொருத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசு மேற்கொள்கிறது எனவும், இது குறித்து கிராமசேவகர்களிடம் தெரிவித்தும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்றும் இது கிராம சேவகரின் தலைமையில்தான் நடைபெறுகிறது என்றும் அம்மக்கள் கூறுகின்றனர். தனியார் நிறுவனம் எங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிறது எனக்கூறி கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் கே .ஜெகநாத்திடம் நீங்களும் அதற்கு துணைபோக வேண்டாம் என்ற மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் பின்னணியிலும் சந்திரகாந்தன் தான் இருக்கிறார் என மக்கள் அச்சமடைகின்றனர்.
பதில் சொல்வது யார்?
இவற்றுடன் தொடர்புபட்டதாக கடந்த 30.03.2023 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (கச்சேரியில்) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற சலசலப்பு சர்வதேச ஊடகங்களிலும் தற்போது சிலாகித்து பேசப்பட்டு வருவதோடு, இது தொடர்பாக காணொளிகளும் பகிரப்பட்டு வருகிறன.
இதில் முக்கியமாக இக்காணிகள் தொடர்பான விவரங்களை தனக்கு தருமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவிடம் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு அவர் ”காணிகள் தொடர்பான எந்த விபரங்களும் மாவட்ட செயலகத்தில் கிடையாது” என்று பதிலளித்திருந்தார். எப்படி ஒரு மாவட்ட செயலகத்தில் காணி தொடர்பான எந்த ஆவணங்களும் இல்லாமல் போவது? இது உண்மையில் யோசிக்கப்படவேண்டிய விடயமே.
இவ்வாறு பல குற்றச்சாட்டுகள் பிள்ளையான் மீது சுமத்தப்பட்டு ஆதாரங்களும் வெளியாகியிருந்தன. மேலும் இது தொடர்பில் 2012 இல் இருந்து காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆணையாளராக பணியாற்றிய முன்னாள் காணி ஆணையாளர் நே.விமல்ராஜ், மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிள்ளையானுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை கடந்த காலங்களில் முன்வைத்தமையையும் யாரும் மறந்திருக்க முடியாது.
அதில் விமல்ராஜ், மட்டக்களப்பு அரசியல்வாதி ஒருவர் இராஜாங்க அமைச்சர் கடமையை பொறுப்பேற்றவுடன் என் மீது பல அழுத்தங்கள் தொல்லைகள் போலி பிரச்சாரங்களை மேற்கொள்ளத் தொடங்கினார் எனவும் . குறித்த இராஜாங்க அமைச்சரின் உறவினர்கள் ,தெரிந்தவர்களுக்கு ஏன் சில நிறுவனங்களுக்கு கூட காணிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார் எனவும் சிலருக்கு பேர்ஸ் கணக்காகவும் சிலருக்கு ஏக்கர் கணக்காகவும் சில நிறுவனங்களுக்கு 50,100 ஏக்கர் கணக்கிலும் காணிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார் எனவும் தெரிவித்தார். கௌரவ இராஜாங்க அமைச்சர் என்ற முறையிலும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் என்ற வகையிலும் அவரது அலுவலகம் சென்று பணியைத் தாண்டி எந்த ஒரு காரியமும் என்னால் செய்ய முடியாது என்று ஆணித்தனமாக கூறியதாக விமல்ராஜ் அந்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். அதிலும் குறிப்பாக சாணக்கியனுடைய காணியை கையளிக்குமாறு தன்னிடம் கோரிக்கை விடுத்திருந்ததையும் தெரிவித்திருந்தார். இதற்கு தான் மறுப்பு தெரிவித்ததுடன் இதற்கான சட்ட நடவடிக்கையை நீங்கள் எடுக்க முடிந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.
அன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பழிவாங்கல் தொடர்ச்சியாக இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது எனவும் மேலும் குறித்த இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தொலைபேசி வாயிலாக ‘என்னுடைய உறவினருடைய காணி சந்திவெளியில் இருக்கின்றது. அவர்களது காணி அடைப்பதற்குரிய வேலைகளை செய்ய விடுங்கள். சட்டரீதியான ஆவணப்படுத்தல்களை பிறகு பார்த்துக் கொள்வோம்’ என தன்னிடம் கூறியிருந்தாகவும் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
மேலும் சந்திவெளியில் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களால் 12 ஏக்கர் காணியில் மாற்றுத்திறனாளிகளுக்காக செயற்திட்டம் ஒன்றை செயற்படுத்தப்பட இருந்த நிலையில் இதற்கான காணியை தான் ஒப்படைக்கும் தருவாயில் இருந்த போது பிள்ளையான் அந்த காணியினை வழங்க வேண்டாம் எனக் கூறியதாகவும் அதற்கு தான் எதிர்ப்பை தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். பிள்ளையான் தன்னுடைய அமைச்சர் பதவியையும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியையும் பயன்படுத்தி மட்டக்களப்பு அரசாங்க அதிபராக இருந்த திரு. கருணாகரனின் உதவியுடன் பல சட்டரீதியற்ற செயற்பாடுகளை செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தனது ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில், 2017 ஆம் ஆண்டு இலங்கை முதலீட்டு சபையினால் புன்னைக்குடா பகுதியில் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக காணியை அளவீடு செய்வதற்காக ஏற்பாடுகளை செய்து இருந்ததாகவும். காணி கையளிப்பு செய்யும் இறுதி கட்டத்தில் ஒரு திட்டமிட்ட குழு காணியை அபகரிப்பு செய்வதற்காக போராட்டங்களை நடத்தி அந்த செயற்திட்டத்தையே இல்லாமல் செய்ததாகவும் தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்?
நிலைமை இவ்வாறு இருக்கும் பொழுது மேலும் பல காணி அபகரிப்பு தொடர்பான விடயங்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. குறிப்பாக மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பல இடங்களிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் தனிப்பட்ட நபர்களினால் பலவந்தமாக பிடிக்கப்பட்டு வேலிகள் அமைக்கப்பட்டு காணப்படுகின்றன. அதேபோல மகிழவட்டுவான் என்னும் இடத்திலும் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காணியை அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் பலவந்தமாக அபகரிப்பு செய்வதற்கும் ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாகவும் இதுவரை வெளிகொண்டுவரப்படாமலிருக்கும் ஏனைய காணி அபகரிப்பு தொடர்பான விடயங்களும் இன்னுமொரு கட்டுரையில் ஆதாரத்துடன் வெளிப்படுத்தப்படும்.
ஒட்டு மொத்தத்தில் மேற்கூறிய நில அபகரிப்பு சம்பவங்கள் யாவும் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் நடந்தவைகளே. ஏன் இன்று கூட எங்கோ ஓர் இடத்தில் தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கான அடித்தளங்களும் வேலைப்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இதை எம்மால் மறுக்க முடியாது. மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் செல்வது மக்களின் குறைகளை நீக்கி, மக்களின் தேவைகளை பாராபட்சமின்றி நிறைவேற்றவே. ஆனால் இங்கு ஒரு இராஜாங்க அமைச்சர் தனக்கு வழங்கப்பட்ட பதவியை துஸ்பிரயோகம் செய்வது மட்டுமல்லாமல், இதுவரை தன்னை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயலாகவே மேற்கூறிய குற்றச்சாட்டுகள் புலப்படுகின்றன. என்னதான் யார் கூறினாலும் எப்படி கூறினாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதே உண்மை.