தியாக சுடர் அன்னை பூபதி கணபதிப்பிள்ளை அம்மையாரது 35வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு 8 மாவட்டங்களில் வாகன ஊர் வலம் பவனி வருகிறது. 16.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் யாழ் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் தூபியிலிருந்து இவ்வாகன ஊர் வலம் ஆரம்பமானது.
அந்தவகையில் இன்று(18.04.2023) அன்னை பூபதி அம்மையார் உண்ணா நோன்பை ஆரம்பித்து உயிர்நீத்த இடமான மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலய முன்றலில் இருந்து கல்லடி, களுவாஞ்சிகுடி வழியாக அம்பாறை மாவட்டத்தை நோக்கி பயணமானது. இப்பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் சுரேஷ், கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
அவர்கள் கருத்து தெரிவிக்கையில், 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பிற்காக இலங்கைக்கு வந்த இந்திய அமைதி படை சிறிது காலத்திலேயே அவர்களது ஆயுதங்களை தமிழீழ மக்களுக்கு எதிராக திருப்பியது. படிப்படியாக அராஜகங்களும் அடக்கு முறைகளும் வலுப்பெற தொடங்கின. இளைஞர்கள், இளம் குடும்பஸ்தர்களை கொலை செய்தல், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்தல், சொத்துக்களை சேதம் செய்தல் என பல கொடுமைகளை செய்தனர்.
இவற்றினை தாங்கிக்கொள்ள முடியாமல் இந்திய வல்லரசிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து 1988 ஆம் ஆண்டு பங்குனி 19 ஆம் திகதி அன்னை பூபதி அம்மையார் தனது உண்ணா நோன்பை ஆரம்பித்திருந்தார்.
- இந்திய அமைதி படை விடுதலை புலிகளுடன் உடனடியாக பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க வேண்டும்.
- யுத்தம் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். என்பவையே அக்கோரிக்கைகள் ஆகும்.
56 வயது நிறைந்த 10 பிள்ளைகளின் தாயான அன்னை பூபதி அம்மையார் தனது குடும்பத்தார், உறவுகளுக்கு என எவற்றிற்கும் பொருட்படுத்தாது தமிழீழ பிரச்சனையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல தன் உயிரை தியாகம் செய்துள்ளார். 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தன்னை தமிழ் மண்ணுக்கு அர்ப்பணித்து இன்று உலகெங்கும் வாழும் 13 கோடி தமிழ் நெஞ்சங்களிலும் வரலாற்றிலும் இடம் பிடித்துள்ளார் என தெரிவித்தனர்.
மேலும் இவ் வாகன பேரணிக்கு மட் /மட் / மகாஜன கல்லூரி ஆசிரியர்களும் மாணவிகளும் பூ வைத்து தங்கள் மரியாதைகளை செலுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.