மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச்சென்ற களுவாஞ்சிகுடி பேருந்து நிலையத்திற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்து அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்வதாக எமது Battinaatham ஊடகத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இப்பேருந்து இந்த வெப்பமான சூழ்நிலையிலும் நிற்பதற்குக்கூட இடமில்லாமல் அதிக பயணிகளை ஏற்றி சென்றுகொண்டிருக்கின்றது. இது தொடர்பாக நடத்துனரிடம் சுட்டிக்காட்டியபோதும் அதைப்பற்றி சற்றும் கவலைப்படாததோடு தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் தொடர்ந்தும் அதிக படியான பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்து கொண்டிருக்கின்றது.
நீண்ட தூரம் பயணம் செய்யும் இப்பேருந்தில் சுமார் 25 பயணிகள் நின்றவாறு பயணித்து கொண்டிருக்கின்றார்கள். எமது ஊடகத்திற்கு முறைப்பாடு வழங்கிய பயணி, இது தொடர்பாக களுவாஞ்சிகுடி பேருந்து நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர்கள் இது தொடர்பில் சரியான பதில்கள் எதுவும் வழங்கவில்லை என கூறினார்.
மீண்டும் Battinaatham ஊடகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் களுவாஞ்சிகுடி பேருந்து நிலைய பொறுப்பதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, ‘பண்டிகை காலங்களில் இவ்வாறு அதிக பயணிகள் பேருந்துகளில் செல்வது வழமை. அவர்களை ஏற்றாத பட்சத்தில் அவர்களும் எம்மீது குற்றச்சாட்டினை முன்வைப்பர். நாங்கள் இக்கோரிக்கையை ஏற்று நடத்துனரை தொடர்பு கொண்டு அதிகப்படியான பயணிகளை ஏற்ற வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்’ என்றனர்.