ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிமுக்குச் சொந்தமான புத்தளத்திலுள்ள தோட்டம் ஒன்றில் புதையல் தோண்டிய இரண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (19.04.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படை குறிப்பிட்டுள்ளது.
சோதனை நடத்தப்பட்டபோது, புதையலைப் பெற்றுக்கொள்வதற்காக யாகம் செய்ததாகக் கூறப்படும் பூசகர் தப்பிச் சென்றதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவரை கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குருணாகல் முகாமை சேர்ந்த அதிரடிப்படையினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பதுளை தல்தென பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் முனமல்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் விசேட அதிரடைப் படையினர் அறிவித்துள்ளனர்.