பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், எமது இனத்தின் மீது குறித்த சட்டமானது பிரயோகிக்கக்கூடிய பாதகமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக இன்றைய தினம் (25.04.2023) வடக்கு, கிழக்கு தழுவிய பிரதேசத்தில் அனைத்து வர்த்தக, நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான நிர்வாக முடக்கப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடையடைப்புகள், பாடசாலைகள் முடக்கம் மற்றும் மக்கள் நடமாட்டம் என்பன குறைவாகக் காணப்படுகின்றது. அரச திணைக்களங்களில் செயல்பாடுகளுக்காகத் திறந்து உள்ள போதும் அவற்றில் சேவையை பெற்றுக்கொள்ள வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் ஒரு சில பேருந்துகளே சேவையில் ஈடுபடுகின்றன.
இந்த நிர்வாக முடக்கப் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பெருமளவு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள், வியாபாரிகள், தொழிற்சங்கங்கள், தனியார் போக்குவரத்துத்துறையினர், பல்கலைக்கழக மாணவர்கள் எனச் சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.