மட்டக்களப்பு கரடியனாறு காரைக்காடு பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த பிரதம பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட 4 பேர் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், அதிரடிப்படை கட்டளை தளபதி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் D. வெலிவவிதான அவர்களின் வழிகாட்டலில் வவுணதீவு விசேட அதிரடி படை முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையிலான அதிரடி படையினர் சம்பவ தினமான நேற்றிரவு வீதி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது கார் உட்பட புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்த கூடிய ஸ்கேனிங் இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளன.
காரில் பயணித்தவரை வழிமறித்து சோதனையிட்டபோது அதில் உயர் ரக ஸ்கேனிங் இயந்திரம் மீட்கப்பட்டதுடன் அதில் பயணித்த மீரிகாம பொலிஸ் பிரிவில் கடமையாற்றிவரும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட 4 பேரை கைது செய்து கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே பகுதில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதையல் தோண்டிய சம்பவம் குறித்து பௌத்த பிக்கு ஒருவரும், சில இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.