விகாரைகளை நிறுவும் வேலைத்திட்டத்தை சிங்கள ஆளும் வர்க்கம் கைவிடவில்லை. எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அதனை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. தமிழரின் எதிர்ப்புகளால் அதனைத் தடுக்கவும் முடியவில்லை. தமிழரின் எதிர்ப்பும்கூட மிகவும் பலவீனமான எதிர்ப்புத்தான். தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் என் போரால் தேர்தல் அரசியலை தாண்டி வரமுடியாமையே இதற்கான காரணமாகும்.
குறிப்பாக, இவ்வாறான எதிர்ப்புகளில் முன்னணியில் நிற்பதாகத் தங்களைக் காண்பித்துக் கொள்ளும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (முன்னணியினர்) மக்களை அணிதிரட்டி நன்கு திட்டமிடப்பட்டவகையில் இவற்றை முன்னெடுக்கவில்லை. இதேவேளை, ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயல்படவும் முன்னணி தயாராக இல்லை. இவ்வாறான மனோநிலையானது மறுபுறம் தமிழரின் எதிர்ப்பை எப்போதும் பலவீனமானதொரு நிலையில் பேணிக்கொள்வதற்கே பயன்படுகின்றது. இது தொடர்பில் முன்னணி கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற சிலர் கூடிக்கலையும் எதிர்ப்பால் – விகாரை அரசியலை ஒருபோதுமே எதிர்கொள்ள முடியாது. முன்னணியினரின் எதிர்ப்புகளால் இதுவரையில் விகாரைகளின் நீட்சியை தடுக்க முடியவில்லை. அவ்வாறாயின், அவர்களின் எதிர்ப்பு பயனற்றது என்பதே பொருளாகும். அவர்கள் கடைப்பிடித்து வருகின்ற அணுகு முறை தவறானது என்பதையே, இதுவரையான அணுகுமுறைகளின் தோல்வி எடுத்துரைக்கின்றது. வடக்கு – கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்ட பின்னர் விகாரைகளை நிறுவுவதை ஒரு பின் – யுத்த விரிவாக்கல் கொள்கையாகவே சிங்கள ஆட்சியாளர்கள் கைக்கொண்டு வருகின்றனர். விகாரைகளின் மூலமான பௌத்த மயமாக்கல் மட்டும் கட்சி பேதங்களை மீறி அனைவருக்குமான கட்சிக் – கொள்கையாகத் தொடர்கின்றது. இதனை எதிர்கொள்வதற்கு வழக்கமான தமிழ்க் கட்சி அரசியல் அணுகுமுறைகளால் பெரிதாக எதனையும் செய்துவிட முடியா தென்பதுதான் இதுவரையான பட்டறிவு.
யுத்தத்துக்குப் பின்னரான கடந்த 14 வருடங்கள் இதனை தெளிவாக நிரூபித்திருக்கின்றன. தமிழ்த் தேசியக் கட்சிகள் என்போரின்எதிர்ப்பு, புலம்பெயர் அமைப்புக்களின் முறைப்பாடுகள், அமெரிக்க -இந்திய தூதரகங்களின் கரிசனை – இவற்றையும் தாண்டி விடயங்கள் நடந்து கொண்டுதானே இருக்கின்றன. அவ்வாறாயின் இவற்றை தடுப்பதற்கு என்னதான் வழி – அல்லது தடுக்கவே முடியாதா? ஒருவேளை சமஷ்டி தீர்வை தமிழர்கள் கோரும் வரையில் அவர்கள் தங்களின் விகாரைகளின் விரிவாக்கத்தையும் நிறுத்தப் போவதில்லையா? அல்லது சில வருடங்களுக்குப் பின்னர் இப்போதிருக்கும் தமிழர்களின் தொகையும் வீழ்ச்சியடைந்துவிடும். அவ்வாறானதொரு சூழலிலில் தமிழரின் எதிர்ப்புகள் வெறுமனே யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குள் மட்டுமே சுருங்கிப்போய்விடும் – எனவே, அதுவரையில் விகாரைகளை விரிவாக்கிக் கொண்டே செல்வோமென்று எண்ணுகின்றனரா? இது தொடர்பில் பல கேள்விகள் எழுகின்றன. ஆனால், தடுப்பதற்கான பதில் மட்டும் சிக்காலனதொரு கேள்வியாகவே தொடர்கின்றது. இது தொடர்பில் முன்னரும் இலங்கையின் முக்கிய பத்திரிக்கை ஒன்று பரிந்துரையை முன்வைத்திருந்தது. மேற்குலக, இந்திய இராஜதந்திரிகளை வடக்குக்கு அழைத்து கலந்துரையாட வேண்டும். ஏன் இது தொடர்பில் கட்சிகளால் சிந்திக்க முடியவில்லை. ஏன் இதனை முன்னெடுக்க முடியவில்லை. அந்தளவுக்கு கட்சிகள் பலவீனமாக இருக்கின்றனவா? தமிழர்களை நோக்கி இராஜதந்திர சமூகத்தை திருப்புவதற்கு இது வரையில் உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் கட்சிகள் ஏன் மேற்கொள்ளவில்லை.