இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று முன்தினம் (13) ஆலோசனை வழங்கினார்.
இதன்படி, சிலோன் டீயின் பெயரை உலகில் பிரபலப்படுத்தும் நோக்கில், இந்நாட்டிற்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளுக்கும் இலங்கை தேயிலை பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளது.
தேயிலை கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த யோசனையை முன்வைத்தார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை தேயிலை சபை, சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, தேயிலை தோட்டக்காரர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் தேயிலை தொழில்துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயணம் முடிந்து விமான நிலையத்தில் இருந்து புறப்படும் நேரத்தில் இந்த நினைவு பரிசு வழங்கப்படுவதுடன் தனியார் தேயிலை உற்பத்தியாளர்களும் தமது இணக்கத்தை வெளிப்படுத்தினர்.
அதன்படி, அரசு மற்றும் தனியார் துறையினரின் ஆதரவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான செலவை தேயிலை வாரியமும், தனியார் நிறுவனமும் ஏற்கும் நிலையில், தற்போது இலங்கைக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருவதுடன், தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களை பார்வையிட அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இலங்கையிலும் தேநீர் அருந்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
இதன்காரணமாக சுற்றுலாப் பயணிகள் மத்தியில் எமது நாட்டின் தேயிலையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.