நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகளில் ஏப்ரல் மாதமளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் 62.05 வீதமாக இருந்த உற்பத்தித் துறையின் இலங்கை கொள்வனவு முகாமையாளர்கள் சுட்டெண் கடந்த மாதத்தில் 42 வீதமாக பதிவாகியுள்ளது.
அதன்படி, இந்த மாதத்தில் புதிய முன்பதிவு, உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் மொத்த கொள்முதல் குறியீடுகளில் ஏற்பட்ட சரிவின் விளைவாக ஒட்டுமொத்த சுட்டெண் வீழ்ச்சியடைந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டமையே இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணம் எனவும், நீண்ட விடுமுறை காரணமாக விநியோகஸ்தர்கள் முன்பதிவை வழங்குவதற்கு எடுத்து கொண்ட நேரம் முன்னையதை விட ஏப்ரலில் வேகமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவைத்துறையில், இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் 56.7 வீத மெதுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
மார்ச் மாதத்தில் கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதன் மூலம், நிதிச் சேவைகள் துணைத் துறையின் வணிக நடவடிக்கைகள் மேலும் வளர்ச்சியடைந்துள்ளதுடன், பண்டிகைக் காலத்தின் தேவைக்கு மத்தியில் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக உப பிரிவின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிகழ்ச்சிகள் மற்றும் ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு மற்றும் சொத்து விற்பனை ஆகிய துணைத் துறைகளும் ஏப்ரல் மாதத்தில் சாதகமான முன்னேற்றங்களை பதிவு செய்துள்ளன.
எவ்வாறாயினும், மார்ச்ச மாதத்துடன் ஒப்பிடும் போது ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததிற்கு அமைய தங்குமிடம் மற்றும் உணவு விநியோக சேவையின் உப பிரிவானது சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.