மட்டக்களப்பில் வை.எம்.சி.ஏ நிறுவனம் நடாத்தும் செவிப்புலனற்ற மாணவர்களின் பாடசாலையான வாழ்வோசை பாடசாலையின் 25 வது வருட நிறைவு விழா அதன் நிறுவனத்தின் தலைவர் வி.ஈ. தர்சன் தலைமையில் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்றது.இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
செவிப்புலனற்ற மாணவர்களின் கற்றல் நடவடிக்கையை மேம்படுத்தி அவர்களை சமூகத்தில் இணைக்கும் செயற்பாட்டை இவ் பாடசாலை கடந்த 25 வருடமாக மேற்கொண்டு வருகின்றது.
இதன்போது பாடசாலை மாணவர்களின் கண்கவர் நடனங்கள் அரங்கேற்றப்பட்ட, பழைய மாணவர்களின் பாடசாலை அனுபவங்கள் பகிரப்பட்டதுடன் மேலும் இம் மாணவர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் கைவினை பொருட்களின் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இம் மாணவர்களுக்கான பாடசாலையின் நிறுவனர் கலாநிதி டனியல் டேவிற் அவர்களை பாராட்டி கெளரவித்தமை சிறப்பம்சமாகும்.
இந் நிகழ்வில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு மற்றும் கிழக்கிற்கான தவிசாளர் அருட்பணி சமுவேல் சுபேந்திரன், கிழக்கு பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கெனடி, முறைசாரா மற்றும் சிறப்பு கல்வி பிரிவினுடைய உதவி கல்விப்பணிப்பாளர் எம். தயாநந்தன்,சமூக சேவைகள் தினைக்களத்தின் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்களான ஏ.எம். எம். அலியார் மற்றும் திருமதி. சி.கோனேஷ்வரன் வை.எம்.சி.ஏ நிறுவன உத்தியோகத்தர்கள், பழைய மாணவர்கள், பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டனர்.
செவிப்புலனற்றவர்கள் வாகனம் செலுத்தும் போது அவர்களின் வாகனங்களுக்கு பிரத்தியோக அடையாங்கள் வழங்கப்பட வேண்டும் மற்றும் இவ் மாணவர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஓய்வுதியம் வழங்கப்பட வேண்டும், புதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என
சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.