மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடாக விநியோகிக்கப்பட்டு வரும் குழாய் நீர் விநியோகம் எவ்வித முன் அறிவித்தலும் இன்றி தடைப்பட்டுள்ளமையினால் மன்னார் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த பகுதியில் நேற்று (26) மாலை முதல் குழாய் நீர் விநியோகமானது தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர பகுதியில் உள்ள அதிகமான மக்கள் தமது வீடுகளுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குழாய் நீர் இணைப்பை பெற்று தமது குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
அண்மைக்காலமாக குழாய் நீர் விநியோகம் தடை ஏற்படும் பட்சத்தில் முன் அறிவித்தல் வழங்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் (26) எவ்வித அறிவித்தலும் இன்றி நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கான பொறியியலாளர் ஒருவர் நிரந்தரமாக இல்லாத நிலையில் பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் சின்னக்கடை பிரதான வீதியில் நீர் குழாயில் ஏற்பட்டுள்ள பாரிய நீர் கசிவை சீர் செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.