பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர், சிறைக்காவலர்களின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்ற பின்னர் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கைதி வழக்கு விசாரணைக்காக சிறைக்காவலர்களால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தபோது, நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, காங்கேசன்துறை பகுதியில் பொலிஸார் அவரை மீண்டும் கைது செய்ய முற்பட்டபோது, தன்னிடம் வைத்திருந்த நஞ்சுப் பொருளை அருந்தியுள்ளார்.
உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திற்கும் அறிக்கையிட்டுள்ளனர்.
வைத்தியசாலைக்குச் சென்று கைதியை நேரில் பார்வையிட்ட நீதவான், அவரது விளக்கமறியலை எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்க உத்தரவிட்டுள்ளார்.
தற்போது குறித்த கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.







