பதுளையில் களப்பயணத்தில் ஈடுபட்டிருந்த கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்த மாணவர்களில் ஒருவரின் தந்தையினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குறித்த விபத்தில் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட விதம், சம்பவத்திற்கான பொறுப்புக்கூறல் மற்றும் விபத்து தொடர்பில் முழுமையான, சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதன்போது, பல்கலைக்கழகத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முடியுமா என்பது தொடர்பில் ஆராய்ந்து, அதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.








