யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாகியுள்ள நபருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரும் பொலிஸாரிடம் முறைப்பாடுகளைச் செய்துள்ள நிலையில், அவர் தனது வசிப்பிடத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார்.
இதனையடுத்து, கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி குறித்த நபருக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை அவர் பொலிஸ் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முன்னிலையாகவில்லை.
இந்நிலையிலேயே, தலைமறைவாகியுள்ள நபருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







