நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்றைய தினம் வடமராட்சி பகுதிக்கு மக்கள் சந்திப்புக்காக சென்ற வேளை புலனாய்வாளர் ஒருவரால் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அவ்விடத்துக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் தொலைபேசி மூலமாக முறையிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உடனடியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடம் எழுத்து மூலமாக முறைப்பாடு ஒன்றினை நாளைய தினம் வழங்குமாறும், அவ்வாறு வழங்கிய பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கருத்து தெரிவிக்கையில்.
இந்த நாட்டின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் மீது ஆயுதமுனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ் அச்சுறுத்தலானது, சாதாரண தமிழ் மக்களின் இயல்பு வாழ்வில் இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை மிகத்தெளிவாகக் காட்டியிருக்கிறது.
மக்கள் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையை மீறி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இக் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதோடு, இச்சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்- என்கிறார்.