இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை சாலை ஊழியர்கள் பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று (13) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும், ஒருங்கிணைந்த சேவை வேண்டாம் என தெரிவித்தும் மேற்குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இ.போ.சயின் தனித்துவத்தை சிதைக்காதே, போக்குவரத்து அமைச்சு தனியாருக்காகவா? என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இந்த கவனயீர்ப்பு பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நேர காலதாமதம் என குறிப்பிட்டு அம்பாறை கல்முனை ஒருங்கிணைந்த சேவையில் ஈடுபடும் இ.போ.ச ஊழியர்களுக்கும், தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்திருந்து.
இதன்போது இரு தரப்பினர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தனர். இந்நிலையில் கல்முனை தலைமையக பொலிஸாரினால் இ.போ.சபை ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்திருந்தனர்.
மேலும் இப்போராட்டத்தினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததுடன், போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தினால் சில பாடசாலை மாணவர்கள் நீண்ட நேரம் பஸ் தரிப்பிடத்தில் காத்திருக்கவேண்டிய சூழலும் காணப்பட்டிருந்தது.