மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வெல்லாவெளி கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த பாரிய இரும்புக் கேற்றையும் பாதுகாப்பு வேலிகளையும் காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன.
கடந்த 05ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், கலாசார மண்டபத்தின் முகப்புக் கேற்றை உடைத்து உள்ளே நுழைந்த காட்டுயானைகள், அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்புப் பாதுகாப்பு வேலிகளையும் சேதப்படுத்தியுள்ளன.
குறித்த கலாசார மண்டபம் ஏற்கனவே இரண்டு தடவைகள் காட்டுயானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாகவும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இதேவேளை, வெல்லாவெளி மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன், பொதுமக்களின் வீடுகளையும் அவை சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியான அச்சத்துடனும் பாதுகாப்பற்ற சூழலிலும் வாழ்ந்து வருகின்றனர்.
பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் குடியிருப்புகள் தொடர்ந்து காட்டுயானைகளால் சேதப்படுத்தப்பட்டு வருவதால், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுயானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மனித உயிர்கள் பலியாகும் துயரச் சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்னர், காட்டுயானை – மனித மோதலைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.














