மத நல்லிணக்கத்துக்கு கெடுதல் செய்பவர்கள் நாட்டுக்கு புற்றுநோயாகவே இருப்பார்கள். எனவே, பொலிஸார் மாத்திரமல்ல, முப்படையினரும் இணைந்து நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்படும் குழுக்களையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதையும் விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான சம்பவங்கள் தற்செயலானவை அல்ல எனவும், மாறாக திட்டமிட்டவகையிலேயே முன்னெடுக்கப்படுவதாகவும் தேசிய புலனாய்வு பிரிவு ஜனாதிபதிக்கு தகவல் வழங்கியிருந்தது.
மேலும், வரலாற்றில் எந்தவொரு காலகட்டத்திலும் நாடு எதிர்கொள்ளாத பொருளாதார நெருக்கடியினால் மக்களும் நாடும் பாதிக்கப்பட்டு தற்போது முன்னோக்கி நகர்கின்ற இன்றைய சூழ்நிலையில், மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து இனங்களுக்கு இடையில் மோதல்களைஏற்படுத்தி, நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு கொண்டுசெல்லும் வகையில் சில குழுக்கள் திட்டமிட்டு செயற்படுவதாகவும் அந்த புலனாய்வு தகவல்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு படைகளின் பிரதானிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்தசந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.மத நல்லிணக்கத்துக்கு கெடுதல் செய்யும் நபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவ்வாறான குழுக்களுக்கு இடமளிக்காது பொலிஸார் மற்றும் முப்படையினரும் செயல்பட வேண்டும். நாட்டின் அனைத்து பாதுகாப்புப் பிரிவுகளும் ஒன்றிணைந்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மறுபுறம், மத மற்றும் இன நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கான தேசிய நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். மத நல்லிணக்கத்துக்குஎதிராகசெயல்படும் நபர்கள் குறித்துகண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும். 2015ஆம் ஆண்டில் விசேட பொலிஸ் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால், இன்று அந்த பிரிவு இல்லை. எனவே, அதனை மீளஆரம்பிக்க ஏற்கனவே பணிப்பரை விடுத்துள்ளேன்.
பொலிஸார் மாத்திரமல்ல, முப்படையினரையும் இணைத்து வலுவான ஒரு பிரிவை உருவாக்க வேண்டும். நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படும் குழுக்களின் பின்னால் யார் உள்ளனர் என்பதை விரைவில் கண்டறிய நடவடிக்கை எடுங்கள். அப்போது தான்இந்த பிரச்சினைக்கு நிலையான தீர்வு கிடைக்கும் என ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.