கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (திங்கட்கிழமை) மே மாத மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநரும்மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான், வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இரா.சாணக்கியன் போன்ற அரசியல் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ் வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியை வழங்குவது தொடர்பாகவும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டு அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கூடுதல் கவ னம் செலுத்தப்பட்டது.
அத்தோடு மாவட்டத்தின் மேச் சல் தரை மற்றும் மகாவலி தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றை எதிர்வரும் 26 ஆம் திகதி நிகழ்த்துவதற்கான தீர்மானமும் எட்டப்பட்டிருந்தது. குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கிழக்குமாகாண ஆளுநரின் பணிக்குழுவினர் உள்ளிட்ட உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்ஜனி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள்மற்றும் பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.