மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் செல்லும் புகையிரத ஒழுங்கை வீதியில் சற்று முன்னர் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் விபத்திற்குள்ளான நபர் காயங்களுடன் வீதி ஓரத்தில் இருந்த நிலையில் மயக்கமடைந்துள்ளார். இவர் மட்டக்களப்பிலுள்ள சிறி நாடான் என்பவரின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்தில் குழுமியிருந்தவர்கள் அம்புலன்ஸ்க்கு அறிவித்த போதிலும் வண்டி வர தாமதமானதை தொடர்ந்து அங்கிருந்த சிலர் வேறு வாகனங்களில் நோயாளரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்த வேறு சிலர் இவர் யார் என எமக்கு தெரியாது, இவர் மயக்கமாகவும் உள்ளார், விபத்தை தாண்டி வேறேதும் பிரச்சனைகள் இருந்தால் என்ன செய்வது அதனால் வேறேனும் பிரச்சனைகள் எமக்கு ஏற்படுமென பயந்து தாங்களும் முன்வராமல் வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முன்வந்தவர்களையும் தடுத்துள்ளனர்.
அந்த வேளையில் சம்பவ இடத்தினூடாக வந்த விபத்துக்குள்ளானவரின் உறவினர் ஒருவர் அவரை அவ்விடத்தில் வந்த உறவினரின் காரொன்றில் ஏற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார். இந்நேரத்தில் சம்பவ இடத்திற்கு அம்புலன்ஸும் வந்தது.
இன்றைய கால கட்டத்தில் மனித நேயம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதோடு நின்று விடுகின்றோம். யதார்த்தமாக ஒரு சம்பவம் நடக்கும் போது தான் யார் யார் மனிதநேயமானவர்கள் என தெரிய வருகிறது. இதே சம்பவம் மேற்குறித்த தரப்பினருக்கோ அல்லது அவர்களின் உறவுகளுக்கோ ஏற்பட்டால் அந்த இடத்தில் எமது மனநிலை என்னவாக இருக்கும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள ஓட்டோவிலோ அல்லது அருகிலுள்ள வாகனத்திலோ ஏற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருப்பார்களா? அல்லது அம்புலன்ஸ் வரும் வரை காத்துக்கொண்டிருப்பார்களா? என ஒருகணம் சிந்திப்போம்.