உறுகாம நீர்பாசன திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட சிறு போக நெற்செய்கைக்கான அறுவடை பெருவிழா நேற்றுமுன்தினம் (25) சித்தாண்டி புதுவெளி குளத்துவட்டை கண்டத்தில் இடம்பெற்றது.
புதுவெளி குளத்துவட்டை கமல அமைப்பின் தலைவர் அ.ஆசீர்வாதம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு நீர்பாசன பணிப்பாளர் எந்திரி.ந.நாகரெத்தினம்,செங்கலடி உறுகாம நீர்பசான பிரிவு பிரதேச நீர்ப்பாசன பொறியிலாளர் எஸ்.விஷ்ணுரூபன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
கௌரவ விருந்தினராக செங்கலடி உறுகாம நீர்பாசனப் பிரிவு திட்ட முகாமையாளர் ஜனாப் அ.மு.ஜெர்பான் முஹம்மட் கலந்து கொண்டார்.
அதிதிகள் மலர்மாலை அணிவித்து மங்கள வாத்திய இசையுடன் வரவேற்கப்ட்டனர்.
தமிழர் பாரம்பரிய கலாச்சார முறையில் அறுவடை இடம்பெற்றது.
அறுவடை செய்யப்பட்ட நெற் கதிர்கள் குறித்த விவசாயக் கண்டத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.அறுவடை எதுவித தடங்கலுமின்றி விளைச்சல் அதிகரிக்க வேண்டும் என்ற பிரார்தனையுடன் விசேட பூசை ஆலயத்தில் நடைபெற்றது.
தலைவரின் தலைமை உரையை தொடர்ந்து அதிதிகளின் உரை இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளின் சேவையை பாராட்டி பொண்ணடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதன்போது பிரதேச ஊடகவியலாளர் நல்லதம்பி நித்தியானந்தனும் கௌரவிக்கப்பட்டார்.
இம்முறை மேற்படி கண்டத்தில் வரலாற்றில் முதற்தடவையாக அறுவடை விழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.