இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர், சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு ஐஸ் என்ற மெத்தாம்பேட்டமைனைக் கடத்தும் மற்றொரு முயற்சியை முறியடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்து 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு இரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த 24ஆம் திகதியன்று இராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர், தனது சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து பேருந்தில் ஏறவிருந்தபோது புலனாய்வுப்பிரிவினர் அவரை கைது செய்தனர்.
அதன்போது அவரது பயணப்பையில் சோதனை நடத்தியதில் கிட்டத்தட்ட 6 கிலோ மெத்தாம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரும் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக தகவல் அளித்த, இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் சென்னை மண்டல இயக்குனர் பி அரவிந்தன், கைது செய்யப்பட்டமூவரும் மணிப்பூரில் உள்ள மோரேயில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக குறித்த போதைப்பொருட்களை எடுத்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.