இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரிப்பதற்குத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தீர்மானித்துள்ளார்.
இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய 2018ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்டு, மீட்க முடியாதுள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கான நிவாரண கொடுப்பனவு, 5 இலட்சத்திலிருந்து 6 இலட்சம் இந்திய ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அதேநேரம் நாட்டுப் படகுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையினை 1.5 இலட்சத்திலிருந்து 2 இலட்சம் இந்திய ரூபாயாக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான நாளாந்த வாழ்வாதார உதவித் தொகையை 350 இந்திய ரூபாயாக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“இந்த நிலையில் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்குத் தேவையான இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.