திருமலை மாவட்டத்தில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள 41361 ஏக்கர் மக்களுடைய காணியை விடுவிக்க கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகின்றது.
மூதூர், குச்சவெளி பகுதிகளில் உள்ள மலை வளம் சட்டத்திற்கு முரணான வகையிலும், அரச அதிகாரிகளின் அனுசரணையிலும் உடைக்கப்பட்டு வருகின்றது.
தம்பலகாமம் – பத்தினிபுரம் மக்கள் காலாகாலமாக பயன்படுத்தி வந்த மயானம் வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
திருமலை – தேவாநகர், காந்திநகர், சீனக்குடா ஒருபகுதி, கப்பல்துறை ஒரு பகுதி மக்களுக்கான காணி ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
புல்மோட்டை – இலந்தைக்குளம் கிராம மக்கள் இன்னும் மீள குடியமர்த்தப்படவில்லை.
திரியாய் வளத்தாமலையடி பகுதியில் காலாகாலமாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டுவந்த 90 ஏக்கர் மக்களின் வயற்காணிகள் விகாராதிபதி ஒருவரால் அடாவடித்தனமாக ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நிலாவெளி தொடக்கம் கொக்குத் தொடுவாய் வரையான கடலை அண்டிய பகுதிகளில் இல்மனைற் என்ற பெயரில் மணல் கொள்ளை இடம்பெற்று வருகின்றது.
வெருகல் நாதனோடை பகுதியில் சட்டத்திற்கு முரணான வகையிலும், அரச அதிகாரிகளின் அனுசரணையிலும் மண் கொள்ளை இடம்பெற்று வருகின்றது.
மேன்காமம், கங்குவேலி, பெரியவெளி குளத்தின் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
திருமலை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட குளங்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றன.
மூதூர் – கங்குவேலியில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுவரும் 77 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளுக்கான ஆவணங்கள் கையளிக்கப்படவில்லை.
மூதூர் – திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் சட்டத்திற்கு முரணான வகையில் மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
தொல்லியல் எனும் பெயரில் தென்னைமரவடி, புல்மோட்டை, திரியாய், குச்சவெளி, நிலாவெளி ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
தென்னமரவடி விவசாயிகளின் விவசாயத்திற்கான நீர் திட்டமிட்டு தடுக்கப்பட்டு கடலோடு கலக்க விடப்படுகிறது.
தென்னமரவடி மக்களின் கடல்வளம் வெளி இடத்தில் இருந்து சுரண்டப்பட்டு வருகின்றது.
திரியாய் விவசாயிகளின் 100ஆம் கண்டம் பகுதியில் விவசாயம் மேற்கொள்ள கடலுக்கு செல்லும் நீரை வழிமறித்து விவசாயத்துக்கு பயன்படுத்த உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
புல்மோட்டையில் மக்களின் காணிகள் புத்த விகாரைக்காக அபகரிக்கப்பட்டு வருகின்றன.
திரியாய் மக்கள் காலாகாலமாக பயன்படுத்தி வந்த மயானம் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.