இலங்கையில் தனியார் வகுப்பு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாடளாவிய ரீதியில் தனியார் வகுப்புகளை நடாத்தும் தனியார் ஆசிரியர்களின் தரம் குறித்து கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன், அந்த ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் தரம் குறித்து சமூகத்தில் இடம்பெறும் கலந்துரையாடல் தொடர்பிலும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.
அதன்படி, தனியார் ஆசிரியர்களை ஒழுங்குபடுத்தி அவர்களின் தொழிலுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதே சிறந்தது என கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழு பரிந்துரைத்தது. ஏனைய நாடுகளில் தனியார் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அனுமதிப்பத்திரம் (Teaching License) வழங்கப்பட்டு அந்தத் தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்ததுடன், இலங்கையிலும் அவ்வாறானதொரு முறையைப் பின்பற்றுவது பொருத்தமானது என குழு மேலும் பரிந்துரைத்தது.
எனவே, இவ்வாறானதொரு முறையைத் தயாரிப்பதில் உடனடி கவனம் செலுத்தி, தனியார் வகுப்பு ஆசிரியர்களை ஒழுங்குபடுத்தி அவர்களுக்கு சட்டரீதியாக தொழில் அங்கீகாரம் வழங்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கையொன்றை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.