ஈரோடு: பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவை மதுரை போலீஸ் கைது செய்து இருப்பது ஒரு பக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மறுபக்கம் ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகியையும் காவல் துறை கைது செய்து உள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் வேலுசாமி என்பவரது மகன் கௌதம். 22 வயதாகும் இளைஞரான ஈரோடு மாவட்ட அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக இருந்து வருகிறார். ட்விட்டரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் எடுத்த போட்டோவை டிபியாக வைத்திருக்கும் இவர் தொடர்ந்து திமுகவையும், தமிழ்நாடு அரசையும் விமர்சித்து வந்தார்.
அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக தொடர்ந்து பதிவுகளை ட்விட்டரில் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை முதலமைச்சர் முக ஸ்டாலின் பாஜகவையும், அதிமுகவையும் எச்சரித்து பேசி வெளியிட்ட வீடியோவையும் எடிட் செய்து கௌதம் வெளியிட்டு இருந்தார்.
இது தொடர்பாக அவர் மீது ஈரோடு சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன் பேரில் நேற்று மாலை 6.20 மணியளவில் ஈரோடு போலீசார் கௌதமை கைது செய்து உள்ளனர். அவர் மீது 66D – IT ACT, 153, 420, 469, 505(2)-IPC ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளார்கள். இதில் மோசடி செய்தவர்கள், இதில் 153, 420 பிரிவும் அடக்கும். இவை ஜாமினில் வெளிவர முடியாத பிரிவாகும். அதேபோல் கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டது, இணையம் வாயிலாக பிறகு ஏமாற்றுதல், சமூக வலைதளங்களில் இரு பிரிவினர் இடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.
கௌதமின் கைது அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக செய்தித் தொடர்பாளரும் சென்னை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான கோவை சத்யன், கௌதம் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
அவர் தெரிவித்து உள்ளதாவது, “அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அன்பு சகோதரர் கௌதம் அவர்களை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். கையாலாகாத திமுகவும் அதன் தலைமையும் காவல்துறையை ஏவல் துறையாக கொண்டு பழி வாங்குவதா.சாது மிரண்டால் காடு தாங்காது.திமுகவின் அழிவு விரைவில்.காத்திரு பகையே.” என்று குறிப்பிட்டு உள்ளார்.