மீனவர்களுடைய பிரச்சனைகளை நாட்டின் அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது ஆனால் அதற்கான தீர்வை நடைமுறைப்படுத்தவில்லை, அதை நடைமுறைப்படுத்துவதற்காக நாம் செயற்பட வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் ஹேமன்குமார தெரிவித்தார்.
மட்டக்களப்பில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் மீனவ சம்மேளனங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஊடக சந்திப்பு ஒன்று நேற்று (12) நடைபெற்றது. இதன்போது பல்வேறு உறுப்பினர்களும் கருத்துகளை முன்வைத்ததுடன் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் ஹேமன்குமார கருத்துகளை முன்வைத்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
விசேடமாக எங்களுக்கு தெரியும் இன்று இலங்கையிலுள்ள மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் மிகவும் பாரதூரமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவர்களது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த விடயங்கள் தொடர்பாக மீனவ சங்கங்களும், மீனவ அமைப்புகளும் முக்கிய பங்காற்றி வருகின்றது.
ஆகவே நாங்கள் இந்த கலந்துரையாடலை மேற்கொள்வதன் பிரதான நோக்கம் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் அவர்களுடைய உரிமைகளுக்காக கிழக்கு மாகாணத்தில் பாரிய சங்கமாக உருவாக்குவதற்கு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் என்ற ரீதியில் எங்களது ஒத்துழைப்பினை வழங்குவோம்.
வட மாகாணத்தில் மீனவ சங்கம் ஒன்றை அமைத்துள்ளோம் அது போன்று கிழக்கு மாகாணத்திலும் ஒரு மீனவ சங்கத்தினை அமைத்து வடக்கு கிழக்கு தெற்கு என்று ஒட்டுமொத்தமாக தேசிய மீனவர் சங்கம் ஒன்றை அமைத்து இதன் ஊடாக பலம் மிக்க ஒரு சக்தியாக மாறுவதே இதன் நோக்கம்.
இதனூடாக எமது கோரிக்கைகள் பல இருக்கின்றன . அவற்றில் பிரதானமானது இலங்கையில் உள்ள மீனவர்களின் வளங்களை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பது தொடர்பாக சர்வதேச ரீதியாக ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு வளங்களை பாதுகாக்க வேண்டும்.
அதுபோன்று சிறு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பாகவும் நாம் பேச வேண்டும். ஆகவே இந்த மீனவர்களுடைய பிரச்சனைகளை நாட்டின் அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது அதை நடைமுறைப்படுத்தவில்லை அதை நடைமுறைப்படுத்துவதற்காக நாம் செயற்பட வேண்டும் . அது போன்று தான் உங்களுக்கு தெரியும் பெண்களுடைய உரிமை சார்ந்த விடயம், மீனவர்கள் எதிர்நோக்குன்ற பிரச்சனைகள் இவை அனைத்தையும் ஒரு பலம் மிக்க சக்தியாக அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதன் மூலம் முன்னெடுக்க முடியும்.
இந்த நாட்டில் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் சுற்றுலா தொடர்பான விடயங்கள் கரையோர மீனவர்களின் காணி பிரச்சினைகள் போன்ற விடயங்கள் நாட்டின் அரசாங்கத்துடன் பேச வேண்டும். இதில் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது.இதன் காரணமாகவே தான் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் ஒரு பலமிக்க அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காகவே நாம் இந்த கலந்துரையாடலை மேற்கொண்டு இருந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.