மட்டக்களப்பு திருகோணமலை கல்முனை உட்பட பல பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள், மற்றும் வீடு உடைப்பு போன்ற 10 திருட்டு சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி ஒருவரை கிளிநொச்சியில் வைத்து நேற்று சனிக்கிழமை (17) கைது செய்ததுடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் கையடக்க தொலைபேசிகள் மடிகளணி, மோட்டார் சைக்கிள் என்பன மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மட்டக்களப்பில் மோட்டர்சைக்கிள் மற்று வீடு உடைத்து திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டு கொண்டனர்.
இதனையடுத்து சூத்திரதாரி மறைந்திருந்த இடம்தொடர்பாக கிடைத்த தகவலின் பிரகாரம் மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜி.எம்.எஸ். கஜநாயக்கா தலைமையிலான சப்இன்பெக்டர் எம்.எஸ்.எம்.ஷகி பொலிஸ் சாஜன் பிறேமதாஸ், ஹகுமான், சி.பவிராஜ், எஸ்.மயூரன், திலீபன் ஆகியேர் கொண்ட பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று கிளிநோச்சி பகுதியில் வைத்து குறித்த சூத்திரதாரியை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்படவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திருகோணமலை நிலாவெளியை சேர்ந்த 29 வயதுடைய இவர் கிளிநொச்சியில் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகவும் திருகோணமலை, கல்முனையில் மட்டக்களப்பில் இரு மோட்டர்சைக்கிள், உட்பட 5 மோட்டர் சைக்கிள்களை திருடியதுடன் களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள 5 வீடுகள் உடைத்து திருடியதுடன் மோட்டர் சைக்கிளில் சென்று மட்டு ஜீவி வைத்தியசாலை பகுதியில் வீதியால் சென்ற பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் போன்ற 10 திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும்,திருடிய தங்க ஆபரணங்களை விற்று வாகனம் ஒன்றை வாங்கியுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஒரு மோட்டர் சைக்கிள், மடிகளணி ஒன்று, 7 கையடக்க தொலைபேசிகள், மற்றும் உருக்கிய நிலையில் ஒரு தொகை தங்கத்தினை மீட்டுள்ளதுடன் திருடிய பணத்தில் வாங்கிய மகேந்திர ரக கப் வாகனத்தை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.