இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ.சுமந்திரனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்றையதினம் (14) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில், இனவாதம் தலை எடுக்காத இந்தத் தேர்தல் சமயம்தான் எல்லாத் தரப்பினுடனும் திறந்த மனதுடன் பேசுவதற்கு மிகப் பொருத்தமான காலம். எல்லா வேட்பாளர்களுடனும் நிபந்தனை ஏதுமின்றிப் பேசுங்கள்.
அவர்களை இணங்க வைக்க முயலுங்கள். அப்படிப் பேசுபவர்களில் யார் தீர்வுக்குப் பொருத்தமானவர்கள் என்பதை நீங்கள் அடையாளம் கண்டு, அவர்களை ஆதரிக்கும்படி உங்கள் மக்களை நீங்கள் வழிபடுத்தலாம், அது இறுதி நேரத்தில் செய்ய வேண்டியது.
இப்போது நீங்கள் எல்லோருடனும் மனம் விட்டுப் பேசுங்கள். பொதுவாக இணங்கக் கூடிய விடயங்களை அடையாளம் காணுங்கள். ”தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஒவ்வொரு வேட்பாளரினதும் கருத்து நிலைப்பாட்டைப் பகிரங்கப்படுத்தச் செய்யும் விதத்தில் அவர்களுடனான உங்களுடைய உரையாடல் அமைய வேண்டும்.
அப்படி அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்களாயின் தேர்தலின் பின்னர் தன்னும் தென்னிலங்கை, தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் ஒற்றுமைப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க அது உதவும்” ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினிடமும் நான் இதைத்தான் கூறியுள்ளேன்.
எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை விரும்பினால் நீங்கள் இறுதிக் கட்டத்தில் எடுக்கலாம். அதற்கு முன்னதாக இப்போது எல்லாத் தரப்பினருடனும் திறந்த மனதுடன் பேசுங்கள்!” என இந்திய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.