ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது திட்டங்களை நாடாளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் தெளிவாக முன்வைத்துள்ளார்.
நாங்கள் நெருக்கடியிலிருந்து மீண்டு ஸ்திரமான உறுதியான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்றால் பின்பற்றவேண்டிய கட்டமைப்பை அவர் முன்வைத்துள்ளார்.
சிலர் சர்வதேச நாணய நிதியத்தின் செல்வாக்கு அதிகமாக காணப்படுகின்றது. நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கின்றனர். சிலர் எதையாவது குறைவாக சொல்கின்றனர்.
ஆனால் ஒட்டுமொத்தமாக நாங்கள் ஒரு அரசாங்கம் என்ற வகையில் சர்வதேச அமைப்புகள் – சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, நிதி வழங்கும் நாடுகள், பரிஸ் கிளப் உறுப்பினர்கள் போன்றவர்களுடன் கலந்துரையாடி தீர்மானித்த பாதையே இது.
நாங்கள் இன்னமும் கடனில் சிக்குண்டுள்ளோம். இலங்கை தொடர்ந்து இவ்வாறான கடன்நிலையில் நீடிக்க முடியாது.
மேலும் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை ஆயுளை கொண்டுள்ள நாடாளுமன்றம் ஜனாதிபதியிடம் உள்ளது.
அவர் முதலில் 2025ம் ஆண்டுக்கான வரவு – செலவுதிட்டம் குறித்து சிந்திக்கவேண்டும். அதற்கான கட்டமைப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்தலின் பின்னர் வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும்.
இல்லையென்றால் அடுத்த மூன்று மாதங்களிற்கான நிதி ஒதுக்கீட்டு வாக்கெடுப்பு இடம்பெறவேண்டும். பின்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவிக்கவேண்டும். என்றார்.