கராத்தே போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் 10 தங்கப்பதக்கங்கள், 11 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த கராத்தே போட்டி கடந்த 25 ஆம் திகதி, ராம் கராத்தே சம்மேளனத்தினால் தேசிய ரீதியாக அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் அமைந்துள்ள கொல்லநுலைப் பாடசாலையில் கராத்தே விளையாட்டுக்கான எவ்வித அடிப்படை விளையாட்டுப் பொருட்கள் இல்லாத நிலையிலும் குறித்த மாணவர்கள் இச்சாதனையை நிலை நாட்டியுள்ளனர்.
கராத்தே பயிற்றுவிப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியரின் தொடர் பயிற்சி மற்றும் முயற்சியினால் கொல்லநுலைப் பாடசாலை மாணவர்களுக்கு வரலாற்றில் முதன்முறையாக கராத்தே பயிற்சி வழங்கப்பட்டு இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.