தமிழரசுக் கட்சி எந்த ‘ஒரு’ குடும்பத்தினதும் தனிப்பட்ட சொத்து அல்ல. அது ஜனநாயகத் தன்மை பேணப்படும் அடிப்படைகளைக் கொண்டது. அதனைக் கருத்தில் கொண்டுதான், கட்சியின் நிறுவனரான தந்தை செல்வா, கட்சியின் யாப்பு விதிகளை அமைத்தார்.
வடக்கு கிழக்கு பூராவும் கட்சிக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிற கட்சியாக, ஒவ்வொரு பிரதேசத்தினதும் தனிப்பட்ட நலன்கள், தேவைகள், எதிர்பார்ப்புக்கள் உள்ளிட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை கட்சிக் கட்டுமானம் கொண்டிருக்கின்றது. அதன் அனைத்து முடிவுகளையும் யாழ்ப்பாணத்துக்குள் அல்லது கொழும்புக்குள் இருந்து கொண்டு எடுக்கக்கூடாது என்பது அதன் பொருளாகும்.
(ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்) ஜனநாயகத்தைப் பேணும் ஒரு கட்சியாக தமிழரசுக் கட்சி தன்னுடைய நிலைப்பாட்டினை வெளிப்படையாக மத்திய குழுவினைக் கூட்டி அறிவித்திருக்கின்றது. மத்திய குழுவினை கூட்டுவதற்கான கோரம், 11 உறுப்பினர்களாகும். வவுனியாவில் நேற்று (01) இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் 30 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சுகயீனம் காரணமாக தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று செயலாளருக்கு அறிவித்திருக்கிறார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமையினால் தன்னுடைய நிலைப்பாடுகளை கடித மூலம் அறிவித்திருக்கிறார். அந்தக் கடிதமும் நேற்று கூட்டத்தில் வாசிக்கப்பட்டு கருத்து உள்வாங்கப்பட்டிருக்கின்றது.
இன்னொரு மத்திய குழு உறுப்பினரான சிறீநேசன் தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று அறிவித்திருக்கிறார். ஒரு சில மத்திய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆரம்பத்தில் கலந்து கொண்டுவிட்டு இடையில் சென்றுவிட்டார்கள்.
முக்கியமான தேர்தல் இடம்பெறுகின்ற கால கட்டத்தில் கட்சியின் மத்திய குழு கூடி முடிவெடுத்திருக்கின்றது. அந்த முடிவு கூட்டத்தில் வாக்கெடுப்பின்றி ஒருமித்த (பிளவுபடாத) தீர்மானமாக முன்மொழிந்து ,வழிமொழியப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதற்குப் பிறகு ‘எனக்கு அந்தத் தீர்மானம் பற்றி தெரியாது, அந்தத் தீர்மானத்தை எடுக்கும் போது நான் கூட்டத்தில் இல்லை’ என்று யாராவது அறிவித்தால் அது அபத்தமானது. அந்த அபத்தங்களை யார் செய்தாலும் அதனைப் புறந்தள்ள வேண்டும்.
தமிழரசுக் கட்சி தன்னுடைய நிலைப்பாடுகளை அறிவித்துவிட்டது. அதுவும் அந்தக் கட்சிக்குள் வாதப் பிரதிவாதங்களை நடத்தி முடிவினை அறிவித்துவிட்டது. அந்தத் தீர்மானத்தை ஏற்பதா, இல்லையா என்பதை தமிழ் மக்கள் இனி முடிவு செய்வார்கள். அதனை விடுத்து, தமிழரசுக் கட்சியை குடும்பக் கட்சியாக நடத்த விரும்புவோரின் எண்ணத்தினை கட்சி பிரதிபலிக்கவில்லை, அனுமதிக்கவில்லை என்பதற்காக யாராவது குத்தி முறிந்தால் அதுபற்றி கரிசனை கொள்ள வேண்டியதில்லை.
தமிழரசுக் கட்சி ஆயுதப் போராட்ட இயக்கமாக இருந்து பின்னர் கட்சியாக மாறவில்லை. முன்னாள் ஆயுதப் போராட்ட இயங்கங்களில் தான் ‘வாழ்நாள் தலைவர்’ கொள்கை இன்னமும் நிலைப்பில் இருக்கின்றது. அந்தக் கொள்கையை தமிழரசுக் கட்சிக்குள் வரிந்து கொள்ளலாம் என்று யாராவது நினைத்தால் அது அரசியல் அறமற்ற அற்பத்தனமாகும்.
ஜனநாயக கட்டமைப்பின் தன்மைகளைக் கொண்ட கட்சிக்குள் வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்துதான் தீர்மானங்கள் எடுக்கப்படும். அது தமிழரசுக்குள் நிகழ்ந்திருக்கின்றது. தமிழரசு மத்திய குழுவுக்குள் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், செயலாளர் என்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லை. அங்கு வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் சமனானது. அதுதான் கட்சியொன்றின் அடிப்படையைக் காப்பாற்றும். இல்லையென்றால் தமிழரசுக் கட்சி எப்போதோ யாரோ ஒருவரின் குடும்பக் கட்சியாக மாறியிருக்கும். அப்படி ஏதும் இதுவரை நிகழவில்லை. இனியும் நிகழ வாய்ப்பில்லை. அதுதான் தமிழரசுக் கட்சி காக்கப்பட வேண்டியதன் அடிப்படைக் காரணம்.