டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழரசு ஆகிய கட்சிகள் இனப்படுகொலையாளிகளை காப்பற்றிவிட்டி தற்போது ஒற்றுமையை பற்றி பேசுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம்(04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பொது வேட்பாளர் என்பது ஒரு நாடகம் என்பதனை ஏற்கனவே கூறியிருந்தோம். இன்று அது ஒரு விழலுக்கு இறைத்த நீராகத்தான் காணப்படுகின்றது. எதுவித பிரயோசனமும் இல்லை. தமிழ் மக்களுடைய நீண்டகால அரசியல் போராட்டத்தை சர்வதேச அரங்கில் நளினப்படுத்துகின்ற ஒரு செயற்பாடு தான் இந்த பொது வேட்பாளர் என்கின்ற விடயம்.
மக்கள் மிகத் தெளிவாக இதில் முடிவு எடுக்க வேண்டும். எங்களுடைய ஐம்பதாயிரம் மாவீரர்கள், 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களினுடைய தியாகத்தை கொச்சைப்படுத்தியதாக நான் நினைக்கின்றேன்.
அண்மையில் கூட முன்னாள் போராளி எனப்படுகின்ற மதிப்புக்குரிய காக்கா அண்ணன் அவர்கள் இவ்விடயம் தொடர்பாக பொய்யான விடயங்களை கூறியிருக்கின்றார். ஒரு ஊடக சந்திப்பில் அதனை நான் பார்த்தேன். முழுக்க முழுக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பலத்தையும் அதன் தலைமைத்துவத்தையும் அடிக்கும் விதமாகவே அவரது கருத்துக்கள் அனைத்தும் காணப்பட்டது.
எங்களுடைய தேசிய தலைவர் எதற்காக போராடினாரோ அந்த தேசிய தலைவரையே சர்வதேச அரங்கில் பிழையாக கூறும் ஒரு நிலைப்பாட்டை அவர் கூற வருகின்றார். அவர் கூறியிருக்கின்ற விடயம் என்னவென்றால், பாராளுமன்றத்தில் ஆறாம் திருத்தச் சட்டத்தை நாங்கள் ஏற்றுத்தான் உள்ளே சென்றுள்ளோம் அதனால் இந்த 13-ம் சட்டத்தை பற்றி கவனத்தில் கொள்ள தேவை இல்லை.
13 ஆரம்பத்தில் கேட்கப்படவில்லை இப்போது கேட்கப்படுகிறது. ஆரம்பத்தில் இயக்கம் இருந்தது ஆனால் இப்போது 13 ஏற்றுக் கொள்ளலாம் என்கின்ற கோணத்தில் அவரது கருத்துக்கள் காணப்பட்டது.
எங்களைப் பொறுத்தளவில் அன்றே விடுதலை புலிகள் பிரதானமாக நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி இருந்தார்கள் அதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சிலம்பநாதன் மட்டக்களப்பிலிருந்து அரியநேத்திரன் ஆகியோர் நேரடியாக விடுதலைப் புலிகள் மக்களிடம் கூறி வாக்களிக்கப்பட்டு அவர்கள் உள்ளே சென்றார்கள்.
ஆனால் போர் முடிந்ததன் பிற்பாடு இந்த கொள்கை பிரகடனத்தில் உள்ளே மறைந்த சம்பந்தன் ஐயா அவர்கள் ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட 13 வது திருத்தத்தை அவர் ஏற்றுக்கொண்டு, அதற்குள்ளேயே இருந்தமையினால் அந்த போராட்டத்தினுடைய கொள்கையை முன் கொண்டு செல்ல முடியாத சூழலிலே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைமையிலான கஜேந்திரகுமார் தலைமையிலான அணி வெளியேறியது ஆனால் அன்றும் அரியநேத்திரன் அவர்கள் அங்கு தான் இருந்தார், ஒற்றை ஆட்சி ஏற்றுக் கொண்டுதான் இருந்தார்.
ஆனால் இன்று இவர்கள்அனைவரும் ஒற்றுமையைப் பற்றி பேசுகிறார்கள். இன்று இருக்கின்ற இந்த ராஜபக்ச அரசாங்கத்தையும், இன படுகொலையாளிகளையும், இங்கு இருக்கின்ற ஒட்டுக் குழுக்கள் அனைவரையும் பாதுகாத்தது இந்த ஒற்றுமை தான். அதாவது ஐநா மனித உரிமைகள் பேரவையிலே நாங்கள் நீண்ட காலமாக எங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வரைக்கும் பாராளுமன்ற அங்கீகாரம் கிடைக்கும் வரைக்கும் அந்த விடயத்தினை நாங்கள் தொடர்ச்சியாக கூறி வந்தோம். அது கிடைத்ததன் பிற்பாடும் அதே விடயத்தையே பாராளுமன்றத்தில் மிக தெளிவாக கூறி வருகின்றோம்.
இங்கே இடம்பெற்றது ஒரு இன படுகொலை இதற்கான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விடயம் ஐநா மனித உரிமை பேரவையிலிருந்து தூக்கப்பட்டு பொறுப்பு கூறல் என்கின்ற விடயம் அங்கு இடம்பெறாது, ஒரு நாட்டினுடைய விருப்பம் இல்லாமல் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இது நடக்காது ஆகவே இது அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என்கின்ற விடயம் எனவே இந்த விடயத்தை ஐநாவின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு சென்று அங்கு இருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாங்கள் கூறி இருந்தோம்.
ஆனால் இந்த அரசாங்கத்தை இன்று இருக்கின்ற டெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப் தமிழரசி கட்சி அத்தனையும் ஒன்றாக இணைந்து உள்ளக விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது எனக் கூறி இந்த இனப்படுகொலையாளிகள் அத்தனை பேரையும் காப்பாற்றி விட்டு இன்று இவர்கள் ஒற்றுமையைப் பற்றி பேசுகிறார்கள்.
அரியநேத்திரன் அவர்களின் ஆரம்ப போட்டியை நான் பார்த்தேன். ஏதோ காலடி எடுத்து வைத்து விட்டோம் நாங்கள் முன்னுக்கு கொண்டு செல்வோம் என கூறுகின்றார். அவர் அந்த விடயம் தெரியாமல் அதற்குள் செல்லவில்லை. அவர் தெரிந்தே சென்றிருக்கின்றார்.
மறைந்த சம்பந்தன் ஐயா 2012 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என கூறிய போது இந்த காக்கா அண்ணன் அவர்கள் எங்கே இருந்தார். இந்த அரியநேத்திரன் அவர்கள் எங்கே இருந்தார் என்கின்ற விடயம் எமது மக்களுக்கு தெரியும்.
இன்று காக்கா அண்ணன் போன்றவர்களை இந்த அரசாங்கம் நல்ல சலுகைகளை வழங்கி சரியாக பயன்படுத்துகிறார்கள். தங்களுடைய தேவைகளுக்கு முன்னாள் போராளிகள் எனக் கூறி ஒரு சிலரை தங்களுடைய சலுகைகளை கொடுத்து முழுமையாக பயன்படுத்துகிறார்கள்.
ஆகவே மக்கள் விழிப்படைய வேண்டும். முன்னாள் போராளிகள் மாவீரர்களின் கொள்கையில் உறுதியாக நிற்பார்கள் ஆக இருந்தால் இந்த மாவீரர் தினம் இடம்பெறும் இடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த மாட்டார்கள். திலீபன் அவர்களின் இந்த காலத்தில் குழப்படி ஏற்படுத்த மாட்டார்கள். ஆனால் காக்கா அண்ணன் போன்றவர்கள் ஆரம்பத்தில் மிக மோசமாக செயல்பட்டவர்கள்.
அவை அன்று இருந்த காக்கா அண்ணன் அவர்கள் வேறு இன்று இருப்பவர் வேறு ஒரு பொம்மையாக பயன்படுத்தப்படுகின்றார் என்பதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இது தேசம், ஒரு நாடு என்பதனை கிண்டலாக கதைக்கின்றார்.
தந்தை செல்வா அவர்களின் கொள்கையே இரு தேசம் ஒரு நாடு தான். தமிழ் தேசம் என்கின்ற சொல்லைக் கொண்டு வந்தது அவர்தான் ஆரம்பத்தில் கூறியிருந்தார். அவர்களுக்கு கொழும்பில் சொத்துக்கள் காணப்படுகின்றது. இந்த நிலையில் இங்கு இரு தேசமா என கேளியாக பேசுகின்றார். அவ்வாறாயின் தந்தை செல்வா அவர்களின் சொத்து மலேசியாவில் இருக்கின்றது இந்த நிலையில் அவர் அன்று அவ்வாறு கூறி இருக்கக் கூடாது அல்லவா.
ஆகவே அனைவரையும் கேள்விக்கு உட்படுத்துகின்ற விதமாக இவ்வாறான பொய்களை கூறி மக்கள் மத்தியில் இருக்கின்ற மதிப்பினை குறைக்கின்ற விதமாக காக்கா அண்ணன் செயற்படுகின்றார். ஆகவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தமிழ் மக்களுடைய நீண்ட கால போராட்டத்திற்கு இந்த ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பு நீக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கான சமஸ்டி கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும், எந்த தரத்திலும் நாங்கள் பாரத தேசத்திற்கு அடிபணிய கூடாது. வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களைப் பொறுத்தளவில் இன்னொரு நாடு சார்ந்த ஜனாதிபதி இங்கு வருவதற்கு, குறிப்பாக இந்தியா தவிர்ந்த ஏனைய நாட்டினுடைய ஜனாதிபதி வருவதற்கு இந்த மக்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்தியாவிற்கு சார்பானவர்கள் இங்கு வருவதற்கு விரும்புகின்றோம்.
இந்தியாவின் பாதுகாப்பு எமக்கு மிக முக்கியமானது ஆகவே இந்திய தேசம் உங்களுடைய தேவைகளுக்காக மாத்திரம் தமிழ் மக்களை பகடை காய்களாக பயன்படுத்தக் கூடாது. இன்று தமிழரசு கட்சி, சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கின்றது. இவருடைய காலத்திலே ஆயிரம் விகாரைகளை அமைப்பதற்காக விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டு இருந்தார். அப்படிப்பட்ட ஒருவரையே இன்று ஆதரிக்கின்றார்கள். ஆகவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
இவருடைய ஆட்சி வந்தால் மீண்டும் இந்த விகாரைகள் உரிய இடங்களில் முளைக்கும் அன்று எங்களுடன் வந்து நீங்கள் போராடக்கூடாது. 15 வருடங்களாக எமது மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக அனைத்து இடங்களிலும் போராடுகின்றோம். இன்று காக்கா அண்ணன் போன்றவர்கள், இந்த பொது வேட்பாளரின் பின் நிற்கின்ற அத்தனை பேரும் கைக்கூலிகள் நாங்கள் பகிரங்கமாக கூறுவோம். ஒருத்தன் வந்து இந்த தையிட்டியில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட விகாரை தொடர்பாக போராடவில்லை.
நாங்கள் ஒரு மக்கள் இயக்கமாக நின்று போராடுகின்றோம். ஆகவே வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்ற அனைத்து அபகரிப்பு நிகழ்வுகளுக்கும் எதிராக சிங்கள பௌத்த பேரினவாதத்தினுடைய பரப்புரைக்கு எதிராக நாங்கள் போராடுகின்றோம். நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு கூலிகளையும் பெற்றுக் கொண்டு ஊடகங்களில் போலியான கருத்துக்களை சொல்லுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறான நபர்களை எமது மக்கள் இனம் காண வேண்டும்.
இன்று இறங்கி இருக்கின்ற போது வேட்பாளர் நாங்கள் மதிக்கக் கூடிய ஒருவர். அவர் தன்னுடைய அந்த நிலையில் இருந்து வாபஸ் பெற வேண்டும். நிச்சயமாக யாழ் மன்னார் போன்ற இடங்களில் இரண்டாம் விருப்பு வாக்குக்கு அங்கு பிரச்சாரம் இடம்பெறுகின்றது. இங்கும் அதுவே நடக்கிறது. ஆகவே இது விழலுக்கு இறைத்த நீராகி போய்விடும், தேரை இழுத்து தெருவில் விடுகின்ற நிகழ்வாக போய்விடும் தயவு செய்து இந்த வரலாற்று தவறை நீங்கள் செய்யாமல் இந்த தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும். என்றார்.