அஸ்வெசும நலன்புரி திட்டத்தால் சமுர்த்திதிட்டம் இயற்கை மரணமடைந்துள்ளது என, ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு செவ்வாய்க்கிழமை (03) சென்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி, இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தவில்லை என குற்றஞ்சாட்டினார்.
அதனால்தான் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளேன் எனக் கூறிவிட்டு சபை நடுவே சென்று எதிர்க்கட்சி பக்கத்துக்குச் சென்று ஆசனத்தில் அமர்ந்தார்.
சமுர்த்தி நலன்புரித் திட்டத்துக்கு வருடத்துக்கு 60 பில்லியன் ரூபாய் மாத்திரமே செலவானது. ஆனால் அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்கு 206 பில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்பட்டுள்ளது.
நலன்புரி திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் குறித்து அரசாங்கத்துடன் பலமுறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். ஆனால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கவில்லை. மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசிய என்னை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்கள் விமர்சனம் செய்கின்றனர் என்றார்.