2022 ஆம் ஆண்டு அரகலயவுக்குள் இருந்தவரை இடைக்கால ஜனாதிபதியாக்கினோம். வரிசை யுகத்தை உருவாக்கியது யார், முடிக்கு கொண்டு வந்தது யார் என்பதை செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்துவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
2019 ஆம் ஆண்டு பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோட்டபய ராஜபக்ஸ தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
அரசியல் சூழ்ச்சியினால் எமது அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. பங்களாதேஷ் நாட்டின் நிலைமை தான் 2022 ஆம் ஆண்டு இலங்கையிலும் நிலவியது.
அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொல்லுவதற்கு ஆணை பிறப்பிக்கவில்லை. எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பதவி விலகினார்.
தேசியத்தையும், நாட்டையும் பாதுகாத்துக் கொள்வதற்காக அரகலயவுக்குள் இருந்தவரை இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கு எடுத்த சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்கினோம்.
எமது ஒத்துழைப்புடன் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது நாங்கள் அதற்கு இடமளிக்கவில்லை.
தேசியத்துக்காகவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன். எக்காரணிகளுக்காகவும் நாட்டுக்கு எதிராக செயற்பட போவதில்லை என்றார்.