உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள குழப்பநிலையையும் அதன் பிரதான சூத்திரதாரியையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை பாரபட்சமின்றி முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் இராணுவ சக்தி நேற்று (10) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பங்காளர்களாக இராணுவத்தினரை இணைத்து இந்த நாட்டை ஊழலில் இருந்து மீட்டெடுக்கின்ற பயணத்தின் முன்னோடிகளாக நியமித்துக் கொள்வோம்.
எமது நாட்டின் கொடிய நோயாக மாறி இருக்கின்ற போதைப்பொருள் விநியோகத்தை முற்றாக ஒழிப்பதற்கு இராணுவத்தினரின் பூரண பங்களிப்பையும் பெற்றுக் கொள்வோம்.
நாட்டை பாதுகாப்பதற்கும், நாட்டை ஒருமைப்படுத்துவதற்கும் தொடர்ந்து உயிரை துச்சமாக மதித்து தமது கடமைகளை முன்னெடுக்கின்ற முப்படையினர், காவல்துறையினர், சிவில் பாதுகாப்பு படையினர், உள்ளிட்ட இராணுவத்தினரை அரசியல் காலங்களில் அரசியல் கால்பந்துகளாக நடத்தப்படுகின்றனர்.
தேர்தல் காலங்களில் பல சந்தர்ப்பங்களில் அநாதைகளாக கைவிடப்படுகின்றனர்.
நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் முப்படையினரும் காவல்துறையினர், பாதுகாப்பு பிரிவில் உள்ளவர்களினதும் உரிமைகள் குறித்து குரல் எழுப்பியதோடு உரிமைகளை பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டிருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.