இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நிலவரங்கள் நாளுக்கு நாள் சூடுபிடித்துக்கொண்டே வருகிறது. இதேசமயம் வேட்பாளர்களின் பிரதான ஆதரவு கட்சிகள் தங்கள் தீர்மானத்தில் திடகாத்திரமாக இருக்கின்றது என்று இலங்கை மக்களுக்கு வெளிப்படுத்தியிருந்தாலும், கடந்த 10 ஆம் திகதி இலங்கையின் தனியார் ஊடகம் ஒன்று நடத்திய ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நிகழ்ச்சியை பார்க்கின்ற பொழுது பல்வேறு விதமான எண்ணங்களும், சிந்தனைகளும் எழுவதை தவிர்க்க முடியாமல் உள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களின் எண்ணங்களை இச்சந்திப்பில் வெளிப்படுத்தி இருந்தார்கள். தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தியும், தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கும், முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தமிழ் பொது வேட்பாளர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தியும் மற்றும் தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) கட்சியை பிரதி நிதித்துவப்படுத்தி சிவப்பிரகாசம் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ் ஏன் தாங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவை அவர் தரப்பில் நியாயப்படுத்தியிருந்தார்.அவருடைய நியாங்கள் பெரும்பாலும் தோட்ட மக்கள், மலையக மக்கள், மலையகத்தில் நிலவுகின்ற சிக்கல்கள் மற்றும் மலையக மக்களுடைய தேவைகள் என்ற வட்டத்திற்குள் இருந்தான் அவர் தன் விடங்களை தெளிவுபடுத்தியிருந்ததை காண முடிந்தது.
பொது வேட்பாளர் தரப்பை பிரதிநிதித்துவபடுத்திய சர்வேஸ்வரன், என்ன காரணத்திற்காக தமிழ் பொது வேட்பாளர் என்ற ஒரு நிலைப்பாட்டில் இருந்து இந்த ஜனாதிபதி தேர்தலை தாங்கள் முகம் கொள்கின்றோம் என்றது தொடர்பான விளக்கங்களையும் தெரிவித்திருந்தார். அதிலும் பிரதானமாக இதுவரைகாலமும் கடந்த 76 வருடங்களுக்கும் மேலாக தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் எவ்வாறு உதாசீனம் செய்யப்பட்டது, எவ்வாறு இழுத்தடிக்கப்பட்டது மற்றும் எவ்வாறு தோல்வியை சந்தித்தது என்பது தெடர்பான் விடயங்களை வெளிப்படுத்தியதோடு, தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை ஒரு பிரச்சனையாகவே பார்க்காத ஒரு சூழல் இந்த நாட்டில் நிலவுவதனால் தமிழ் மக்கள் தங்களுடைய தேவைகளையும், அபிலாசைகளையும் வெளிப்படுத்த வேண்டிய ஒரு தேவை இருக்கின்ற காரணத்தினாலும் தாங்கள் தனித்து தமிழ் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டில் இந்த தேர்தலை எதிர் கொள்வதாக தெரிவித்திருந்தார்.
அநுரகுமார திஸா நாயக்கவை பிரதிநிதித்துவ படுத்தி கருத்து வெளியிட்ட சிவப்பிரகாசம், ஒரு மாற்று அரசியல் தேவை ஒன்று இலங்கையில் அடையாளம் காணப்பட்டிருக்கின்ற காரணத்தினால் அதை நோக்கி பயணிக்க வேணடிய தேவை தங்களுக்கு இருக்கின்ற காரணத்தினால் இந்த தேர்தலை தாங்கள் எதிர் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்று வரைக்கும் ஆட்சிக்கு வந்த பேரினவாத கட்சிகள் தங்களுடைய சொந்த அபிலாசைகளையும், சுய நலன்களையும் அடிப்படையாக வைத்தும், அத்தோடு தங்களுடைய சொந்த அபிவிருத்தியை கருத்தில் கொண்டு செயற்பட்ட காரணத்தினால் இலங்கையில் ஊழல், பஞ்சம், பொருளாதாரம் நெருக்கடி போன்ற பல்வேறு விதமான சிக்கல்கள் தோன்றி நாட்டையே சீரழிக்கின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றபடியால் இதிலே ஒரு மாற்றத்தை ஏற்றப்படுத்துவதற்காக தாங்கள் இத்தேர்தலை எதிர் கொள்வதாகவும், நிச்சயமாக தாங்கள் இந்த தேர்தல் ஊடாக பெரிய மாற்றத்தை இலங்கைக்கு கொண்டு வந்து ஒரு சுமூகமான, நீதியான ஆட்சியை நிலைநிறுத்த முடியுமென்று தாங்கள் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ் பொது வேட்பாளர் என்பது தமிழ் தேசிய இனத்திற்கு செய்யும் துரோகம் -சுமந்திரன்.
தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தன்னுடைய கருத்தை முன்வைக்கும் போது பல்வேறு விதமான குழப்பகரமான சூழல் அங்கே ஏற்பட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
குறிப்பாக தமிழ் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை தமிழரசு கட்சி முற்றுமுழுதாக நிராகரிப்பதாகவும், அது தமிழ் தேசிய இனத்தை காட்டி கொடுக்கும் ஒரு துரோகமான செயற்பாடு என்றும் அவர் கருத்து முன்வைத்திருந்தார்.
அங்கே கலந்து கொண்டவர்கள் அவரிடம் பல்வேறு பட்ட கேள்விகளை கேட்டாலும் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததை காண முடிந்தது. ஆனால் அதேசமயம் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு என்று அவர் இதனை குறிப்பிட்டிருந்தாலும், தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களே இந்த நிலைப்பாட்டிற்கு மாறாக தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்திருந்தது தொடர்பாகவும் நாங்கள் பார்க்கக்கூடியவாறு இருக்கின்றது.
இந்நிலையில் இருந்து பார்க்கின்ற பொழுது தமிழ் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாடு தொடர்பாக சுமந்திரன் தெரிவித்த கருத்து தமிழரசு கட்சியின் கருத்தா அல்லது அவருடைய தனிப்பட்ட கருத்தா என்பதை அறிந்து கொள்வதிலே குழப்ப காரமான சூழல் ஓன்று ஏற்பட்டிருப்பதை பார்க்கக்கூடியவாறு இருக்கின்றது.
அநுர குமார திஸாநாயக்கவினுடைய விஞ்ஞாபனம் மற்றவர்களினுடைய விஞ்ஞாபனத்தை விட சிறந்தது- சுமந்திரன்.
அதேசமயம் ஏனைய மூன்று கட்சிகளுடைய நிலைப்பாடு தொடர்பில் அவர் தெரிவிக்கின்ற பொழுது, சஜித் பிரேமதாசவின் உடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை விட அநுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் சிறந்ததாக காணப்படுகின்றது என்றும் அதிலே பல்வேறு முன்னேற்றகரமான விடையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஏற்றுக்கொண்டார். ஆனாலும் தாங்கள் சஜித் பிரேமதாசவையே ஆதரிப்பதற்கு முடிவு எடுத்திருப்பதாகவும் அவர் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
இங்கே வருகின்ற கேள்வி என்னவென்றால் அநுர குமார திஸாநாயக்கவினுடைய தேர்தல் விஞ்ஞாபனம் சிறந்ததாக கூறும் அவரது கட்சி ஏன் அநுர குமார திஸாநாயக்கவை ஆதரிக்க முடிவு எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்து நிற்கின்றது. அது தொடர்பில் அவரும் தெளிவான ஒரு பதிலை அந்த சந்திப்பில் வழங்கவில்லை என்றும் குறிப்பிடத்தக்கது.
ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவதற்கு வாழ்த்து தெரிவித்த மாவை சேனாதிராஜா!
அதேசமயம் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்று முடிவு எடுத்திருந்தும் அதில் கூட சஜித் பிரேமதாச தோல்வி அடைந்ததென்பதே எமக்கு தெரிந்த விடயம். இன்னொரு பக்கத்தில் சுமந்திரன் பிரதிநித்துவப்படுத்தும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்த போது, “உங்களுக்கு நிச்சயம் சிறந்த எதிர்காலமும், வெற்றியும் காத்திருக்கிறது” என்று வெளிப்படையாக குறிப்பிட்டிருந்ததையும் இங்கு பார்க்கக்கூடியவாறு இருக்கிறது.
இங்த விடயங்களையும் பார்க்கின்ற போது, தமிழரசு கட்சி ரணிலையா, சஜித்தையா அல்லது அநுரவையா ஆதரிக்கின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இன்னும் வெளிப்படுத்தாமல் இருப்பது மக்களிடையே பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமந்திரனுடைய நிலைப்பாடு அவருடைய சொந்த நிலைப்பாடா? அல்லது தமிழரசு கட்சியின் நிலைப்பாடா?
தாங்களே தமிழ் பேசும் மக்களுடைய தனித்துவமான கட்சியென்று கூறுகின்ற தமிழரசு கட்சி இது தொடர்பில் இன்னமும் குழப்பமான சூழ்நிலையில் இருந்து கொண்டு இருப்பது நிச்சயமாக ஒரு நேர்மையான அரசியலுக்கு வழி வகுக்கும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தி நிற்கின்றது என்று பார்க்கமுடியாத சூழல் ஒன்று ஏற்பட்டிருக்கின்றது.
அதேசமயம் சஜித் பிரேமதாசவை நியாப்படுத்திய விதத்திலும் சுமந்திரன் அந்த சந்திப்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்ததும் பார்க்கப்படவேண்டி இருக்கின்றது. கிட்டத்தட்ட அவர் சஜித்தினுடைய பிரதிநிதியாக அந்த கூட்டத்தில் கருத்துக்களை முன்வைத்தார் என்ற ரீதியிலும் பார்க்கப்படவேண்டிய தேவை ஒன்றும் இருக்கின்றது.
ஆகையினால் இந்த நிலைமை இவ்வாறு இருக்கையில், எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழசு கட்சிக்குள்ளேயே நியாயமான குழப்பங்களும், நியாமான சிக்கல்களும் தோன்றியுள்ளதைத்தான் இது காட்டி நிற்கின்றது. இதற்கு தமிழரசு கட்சி நேர்மையான பதிலை வழங்குவார்கள் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.