அரசாங்க வளங்களை தவறாகப் பயன்படுத்தியதாக 750க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் TISLக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி வரை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாக 758 முறைப்பாடுகளை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) பெற்றுள்ளது. அவற்றில், அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் (343) அரச பொது வளாகங்களை தவறாக பயன்படுத்தியது தொடர்பானவை.
தேர்தல் பிரச்சாரங்களுக்காக பொது மைதானங்கள், அரச அலுவலகங்கள், கட்டடங்கள் மற்றும் பாடசாலைகள் போன்றவற்றை தவறாக பயன்படுத்துவதும் இதில் அடங்கும். உரிய கட்டணம் செலுத்தாமல் பயன்படுத்திய சந்தர்ப்பங்கள், நீண்ட காலமாக ஒரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள், தேர்தல் விதிகளுக்கு மாறாக சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்களால் வளாகத்தை அலங்கரித்த சந்தர்ப்பங்கள் முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான (117) முறைப்பாடுகள், அரச அதிகாரிகளை தவறாக பயன்படுத்துதல், அவர்களின் திறமை, அறிவு மற்றும் தேர்தல் பிரச்சாரத்துக்காக வேலை செய்யும் நேரம் என்பவற்றை பயன்படுத்துதல் தொடர்பானவை. வரையறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளைக் கொண்ட சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அரச அதிகாரிகள் தேர்தல் சட்டங்களை மீறி நேரடியாகவும் சமூக ஊடகங்கள் ஊடாகவும் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பான சாட்சியங்களுடன் கூடிய அறிக்கைகள் TISLக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
TISL நிறுவனத்துக்கு கிடைத்த ஏனைய முறைப்பாடுகள் பின்வருமாறு:
- உணவு, பணம் மற்றும் நிவாரணங்கள் விநியோகம் தொடர்பான 45 முறைப்பாடுகள்
- அரச வாகனங்களை தவறாக பயன்படுத்துதல் தொடர்பாக 32 முறைப்பாடுகள்
- தேர்தல் காலத்தில் அரச உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள், பதவி இறக்கங்கள் அல்லது இடமாற்றங்கள் தொடர்பாக 7 முறைப்பாடுகள்
- தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் தொடர்பாக 30 முறைப்பாடுகள்
- வாழ்வாதார உதவிகள், கொடுப்பனவுகள் விநியோகம் மற்றும் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளை தேர்தல் இலாபத்துக்காக தவறாக பயன்படுத்துதல் தொடர்பாக 26 முறைப்பாடுகள்
- அரசியல் பிரச்சாரங்களுக்காக அரச நிதியை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக 26 முறைப்பாடுகள்
- அரச பதவிகள் அல்லது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக 14 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ரீதியாக புள்ளிவிபரங்களை பகுப்பாய்வு செய்யும்போது கேகாலையிலிருந்து அதிக எண்ணிக்கையிலான (186) முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
கொழும்பில் இருந்து 71 முறைப்பாடுகள் மற்றும் காலியில் இருந்து 51 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மிகக் குறைந்த முறைப்பாடுகள் (2) அம்பாறையில் பதிவாகியுள்ளன. குருநாகல் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து முறையே 6 மற்றும் 7 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
apesalli.lk என்ற இணையத்தளத்தினூடாக நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட தேர்தல் கண்காணிப்பாளர்களால் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகள் சரிபார்க்கப்பட்ட பின், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு தலையிட்டு சில முறையற்ற செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.