ஜனாதிபதி தேர்தலிலை முன்னிட்டு மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை, தம்புள்ளை லக்கல இறத்தோட்டை ஆகிய 4 தேர்தல் தொகுதிகளில் இருந்து மொத்தம் 429,991 பேர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாத்தளை மாவட்ட அரச அதிபரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான தேஜானி திலக்கரத்ண தெரிவிக்கின்றார்.
நாளை சனிக்கிழமை (21) இடம்பெறவுள்ள 2024ஆ ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக மாத்தளை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் முக்கிய ஊடக சந்திப்பு மாத்தளை மாவட்ட செயளாலர் காரியாலத்தில் நேற்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற போதே அரச அதிபர் தேஜானி திலக்கரத்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மாத்தளை மாவட்டத்தில் 4 தேர்தல் தொகுதிகளிலும் மொத்தம் 330 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்தோடு, வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்குகள் எண்ணக்கூடிய நிலையங்களிலும் 3467 அரச அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தவிர பாதுகாப்பு கடமைகளுக்காக மொத்தம் 1650 பொலிஸார் உட்பட பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தேர்தல் வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டது தொடக்கம் இது வரை மொத்தம் 196 தேர்தல் வன்முறை சம்பவங்கள் சம்பந்தமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. விசாரணைகள் மூலம் கிடைப்பபெற்ற முறைப்பாடுகள் சாதாரணமானவையென தெரியவந்துள்ளதோடு சில அரசியல் வாதிகளினால் இம்மாவட்டத்தில் முறைக்கேடான சம்பவங்கள் இடம்பெற இருந்த போதும் தங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் உடனடியாக தடுத்து நிறுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் மாவட்ட செயளாலர் தேஜானி திலக்கரத்தன தெரிவித்துள்ளார்.
இம்மாவட்டத்தில் அமைதியான தேர்தலை நடாத்திட எமது அரச அதிகாரிகளை முனைப்புடன் செயற்பட்ட வருவதாகவும் பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பை தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.