உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகளை கருத்திற்கொண்டு புதிய விசாரணையை புதியதொரு குழுவினூடாக மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவ்வாறான விசாரணையை நடத்துமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஜனாதிபதி அநுரவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கிடைத்த தாக்குதல் சம்பந்தமான செய்திகளை புறந்தள்ளியமை, தாக்குதல்தாரிகளுடன் தொடர்பில் இருந்த பிரமுகர்கள், பாதுகாப்பில் இருந்த ஓட்டைகள், இந்த சம்பவம் தொடர்பில் ஆசாத் மெளலானா என்பவர் வெளிநாட்டில் வழங்கியுள்ள சாட்சியம் என்பன தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளதாக பாதுகாப்புத்துறையின் உயரதிகாரி ஒருவர் நேற்றிரவு (27) இலங்கையின் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்தாக கூறப்படுகிறது.
அதனடிப்படையில், நீதிமன்ற அனுமதியுடன் முக்கிய பிரமுகர்கள் பலர் கைது செய்யப்படலாமென்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விசாரணை இடம்பெற்று அதிரடியான நடவடிக்கைகள் வருமாயின் அது ஆளுந்தரப்புக்கு மக்கள் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யுமென அரச மேல்மட்டத்தில் கருதப்படுவதாக மேலும் தெரியவந்தது.
சி.ஐ.டியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர அதிர்ச்சித் தகவல் இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பிலும் அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பிலும் சி.ஐ.டியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரியவின் ‘ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல், அரசின் நிழல்கள் மற்றும் தீர்க்கப்படாத மர்மங்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பின்னர், ஊடகவியலாளர்களிடம் ஷானி அபேசேகர இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் விசாரணைகளை ராஜபக்ஷ ஆட்சி தடை செய்ததாக ஷானி அபேசேகர குற்றம் சுமத்தினார்.
அத்துடன், பிரதமரை நியமிப்பதற்கு முன்னரே தன்னை இடமாற்றம் செய்ய கோட்டா உத்தரவிட்டதாகத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் புதிய அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு முன்னுரிமை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் எனவே ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததாகவும் ஷானி அபேசேகர மேலும் சுட்டிக்காட்டினார்.