தமிழ் மக்களுடன் ஆட்சி அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இந்தியாவுக்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்தவேண்டும் என்று தமிழரசு கட்சியின் பெரும் தலைவர் இரா. சம்பந்தன் இந்தியப் பிரதமரை கடிதம் மூலம் கோரியுள்ளார்.
தமிழ் மக்களின் பாதுகாப்பு – அடையாளம் – இருப்பு ஆகியவை இந்தியாவின் தேசிய பாதுகாப்பிலிருந்து குறிப்பாக, அதன் தெற்கு அயல் நாடுகளில் இருந்து பிரிக்க முடியாதவை என்று நாம் உறுதியாக நம்புகிறோம். துரதிர்ஷ்ட வசமாக தமிழ் மக்களின் பாதுகாப்பும் இந்தியாவின் பாதுகாப்பும் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி 36 வருடங்கள் கடந்தும் மழுப்பலாகவே உள்ளது என்றும் அவர் அந்தக் கடிதத் தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தியப் பிரதமரை சந்தித்து கலந்துரையாடுகிறார். இதன் போது ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுக்கு தமிழருக்கான அதிகாரப்பகிர்வு குறித்து வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்து தமிழரசு கட்சியின் பெரும் தலைவர் சம்பந்தன் இந்தியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்தக் கடிதம் நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. நீண்ட அந்தக் கடிதத்தில் பல விடயங்களை சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.இதில், இலங்கை அரசு வாக்குறுதிகளை புறக்கணித்து விட்டது. காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தத் தவறிவிட்டது. பல சட்டங்களால் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இது தேசிய பிரச்னைக்காக ஏற்படுத்தப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மீது நம்பிக்கை
நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடமாக அங்கீகரிக்கப்பட்ட
வடக்கு – கிழக்கில் கூட்டாட்சி ஏற்பாட்டின் மூலம் தமிழ்த் தேசிய பிரச்னைக்கான அரசியல் தீர்வை முன்னோக்கி செயல்படுவதற்கான ஆணையை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எமக்கு வழங்கியுள்ளனர்.
இந்திய உடன்படிக்கை காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்க வழிவகுத்தது. 40 ஆண்டுகளாக இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன் தமிழ் பேசும் மக்கள் கண்ணியமாகவும் – சுயமாகவும் வாழவேண்டும் என்ற நியாயமான மற்றும் நீடித்த தீர்வைக்காண்பதில் இந்தியா வெளிப்படுத்திய உறுதியான உறுதிப்பாட்டுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மரியாதை – அமைதி மற்றும் பாதுகாப்பு எங்களின் நியாயமான அபிலாசைகளை அங்கீகரிக்கும் கூட்டாட்சி
அடிப்படையான அரசியல் தீர்வுக்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
வடக்கு – கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் எப்போதும் பெரும்பான்மையாக உள்ளனர். 13ஆவது திருத்தம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அறி முகப்படுத்தப்பட்டது. இது மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் மாகாண சபை அமைப்பை நிறுவியது. ஆனால், அதிகாரப் பகிர்வுக்கு பதில் அதிகாரப் பரவலாக்கத்தை நடைமுறைப் படுத்தும் ஒற்றையாட்சி அரசமைப்பில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இது
தொடர்பில் நான் எனது தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோருடன் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியிடம் குறைபாடுகளை சுட்டிக் காட்டினோம்.
இதனால்தான் 13ஐ மிஞ்சும் வகையில் ஒவ்வொரு முறையும் நகர்வை முன்னெடுத்தோம் என்று குறிப்பிட்டுள்ள அவர் பின்னர் இலங்கை அரசாங் கங்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் – எட்டப்பட்ட உடன்பாடுகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 13ஆவது திருத்தம் நல்லிணக்கத்துக்கு தேவையான நிலைமைகளை உருவாக்கவே பங்களிக்கும்.
இது குறித்து 2012இலும் வலியுறுத் தப்பட்டது. 2015 மார்ச் 13 இலங்கை வந்த இந்திய பிரதமரான நீங்கள் கூட்டு
கூட்டாட்சியை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தீர்கள்.
தமிழ் மக்களுடன் ஆட்சி அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை
நிறைவேற்றுமாறு இந்தியாவுக்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவை வலியுறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.