நாட்டின் பொருளதார ரீதியான அபிவிருத்தியில் சுற்றுலாத்துறையும் தொழில்முயற்சியும் இன்றியமையாதவையாகவுள்ளன. இவற்றிற்கான தொழில்முனைவோரை வழிப்படுத்தவேண்டிய தேவையுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அழகுக்கலையில் ஈடுபடும் இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து அவர்களுக்கான நவீன பயிற்சிகள் மற்றும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலான நிகழ்வு நேற்று (20) மட்டக்களப்பில் நடைபெற்றது.
அழகுக்கலை தொடர்பான சிறந்த கட்டமைப்பினை ஏற்படுத்தவும் முயற்சியாளர்களை இணைத்துக்கொண்டு அவர்களுக்கான வழிகாட்டல்களை ஏற்படுத்தி அவர்களுக்கான பாதைகளை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் அபிவிருத்தி சபையும், அபக்ஸ் கம்பஸ் நிறுவனமும் இணைந்து இந்த நிகழ்வினை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் ஏற்பாடு செய்திருந்தனர்.
தொழில்முயற்சியாளர்களை இணைத்து அவர்களுக்கான சிறந்த வழிகாட்டல்களை உருவாக்கி அவர்களின் வருமானத்தினை, அதிகரித்து வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதன் ஊடாக சிறந்த தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதன் மூலமாக தேசிய ரீதியாக நாட்டிற்கு பங்களிப்பு செய்வதன் உயரிய நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மாவட்ட உத்தியோகத்தர் என்.கோகுலதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் திசாநாயக்க, அபேக்ஸ் கம்பஸ் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்,ஆசி பன்சி நிறுவனத்தின் தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின்போது இளைஞர் யுவதிகளினை தேசிய ரீதியில் ஒருங்கிணைத்து அவர்களின் முயற்சியான்மைக்கு உதவும் வகையில் ஜென் ஒன்றியம் ஒன்றும் இதன்போது அதிதிகளினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இதன்போது அழகுக்கலையில் 20வருடங்களுக்கு மேல் பணியாற்றிவரும் அழக்குக்கலை நிபுணர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அழகுக்கலையில் பணியாற்றிவருவவோரின் அழக்குகலை கண்காட்சியும் நடைபெற்றது.
அத்துடன் நவீன அழகுக்கலை தொடர்பிலான பயிற்சி வகுப்புகளும் இதன்போது நடாத்தப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர், கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் பெருமளவான எண்ணிக்கையில் தொழில்முயற்சியாளர்கள் இருந்தாலும் கூட அவற்றில் உயர்தரத்தில் தொழில்முயற்சியாளர்களை தேடும்போது குறைந்தளவானோரே காணமுடிகின்றது.
இவ்வாறான நிலையில் இவ்வாறு தேசிய ரீதியலான இணைப்பாக்கம் ஒன்றிணை செய்து தொழில்முயற்சியாளர்களை வழிகாட்டமுன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அழகுக்கலை சங்கங்கள் இருக்கின்றன. அவைகள் ஒன்றாக இணைந்து செயற்படமுன்வரவேண்டும். அனைவரும் ஒரு நிபுணத்தவம் கொண்டவர்களாக மாற்றப்படவேண்டும். என்றார்.































