இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் 74 படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க இலங்கை கடற்றொழில் திணைக்களத்தால் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய விசைப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு பின்னர் இலங்கைச் சட்டப்படி அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
அந்த விசைப் படகுகளை மீன் பெருக்கத் திட்டத்தின் கீழ் நடுக்கடலுக்கு எடுத்துச் சென்று மூழ்கடிக்க கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் பிடிக்கப்பட்டு, மாவட்ட கடற்றொழில் திணைக்களங்கள் மூலம் நீதிமன்றங்கள் ஊடாக அரசுடைமையாக்கப்பட்ட படகுகளே நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்படவுள்ளன.

இரண்டு மாவட்டங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய விசைப் படகுகள் சேதமடைந்து, படகுகளின் உள்ளே மழை நீரும் கடல் நீரும் உட்புகுந்து காணப்படுவதனால் அவற்றை அவை தரித்துள்ள கரையோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்துமாறு மீனவர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
மயிலிட்டித் துறைமுகத்தில் காணப்படும் இத்தகைய படகுகளை அகற்றுமாறு மீனவர்களுடன் துறைமுக அதிகார சபையும் கோரிக்கை விடுத்து வருகின்றது.
இவற்றைச் சீர்செய்யும் வகையிலும் மீன் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று கடற்றொழில் திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது.
இந்தத் திட்டத்தின் கீழ் நடுக் கடலில் மூழ்கடிக்கப்படவுள்ள படகுகளைக் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கடந்த 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் நேரில் பயணித்து அவதானித்து அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளார் எனத் தெரிகின்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்து திரும்பியதும் இந்தப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
அதுவரை இது தொடர்பில் இரகசியம் காக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இ.போ.சபையால் கை விடப்பட்ட 15 பஸ்கள் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து கடற்படையினரின் கப்பல்களில் ஏற்றிச் செல்லப்பட்டு நடுக்கடலில் இப்படி மீன் பெருக்கும் நோக்கத்துக்காக இறக்கப்பட்டன.

இலங்கையில் சிறைப் பிடிக்கப்பட்ட தமது படகுகளை மீட்டுத் தருமாறு இந்தியாவின் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றபோது, நடுக் கடலில் அவற்றை மூழ்கடிக்கும் இலங்கையின் திட்டம் இந்திய மீனவர்களின் மனநிலையில் மேலும் விரிசலை ஏற்படுத்தக்கூடும் என்றே கருதப்படுகின்றது.
ஏனெனில், இலங்கையில் இந்திய மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் 2022 ஆம் ஆண்டு இதேபோன்று ஏலம் விடப்பட்ட சமயம் இந்தியாவில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
தற்போது யாழ்ப்பாணத்தில் 57 படகுகளும், மன்னாரில் 7 படகுகளும், கிளிநொச்சியில் 10 படகுகளும் அரசுடைமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளாக உள்ளன. இவற்றையே நடுக்கடலில் மூழ்கடிக்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இதற்கிடையில் இந்தப் படகுகளில் சிலவற்றைத் தங்கள் பாவனைக்குத் தருமாறு இலங்கைக் கடற்படை இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகின்றது என்று மற்றொரு வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.